ராகுல் காந்தி மீதான தாக்குதல் மூலம் காங்கிரசை பணிய வைக்க முடியாது: நமச்சிவாயம் பேச்சு

ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் சனிக்கிழமை தலைமைதபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராகுல் காந்தி மீதான தாக்குதல் மூலம் காங்கிரசை பணிய வைக்க முடியாது: நமச்சிவாயம் பேச்சு

ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் சனிக்கிழமை தலைமை
தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கி பேசியதாவது:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். அதன்படி குஜராத்
மாநிலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பாரர்வையிட்டு ஆறுதல் கூறச் சென்றார். அப்போது பாஜகவைச் சேர்ந்த கும்பல் அவர் மீது கொலைவெறி
தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய பாஜக அரசு, குஜராஜ் மாநில பாஜக அரசுகளைக் கண்டிக்கும் வகையில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் கடந்த 100 நாள்களாக விவசாயிகள் கேட்பாரற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இந்த அரசுக்கு எண்ணம் இல்லை.

ராகுல் காந்தி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற வேளையில் அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பாஜக அரசு நாடு
முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கலவர சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற விரும்புகின்றனர். அவர்களது கனவு நிச்சயம் பலிக்காது.

வரும் 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. இதை பொறுக்க முடியாமல் அவர் தாக்குதல் நடத்தி உள்ளனர். காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகள் ஆண்ட நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விவசாய கடன் ரூ.70 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது.

ஆனால் புதுவை மாநில அரசு விவசாயக் கடன் ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய முடியாமல் ஆளுநர் கிரண்பேடி அக்கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர். இதை எல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம். 135 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியை எவராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவர்.

தேசியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத குஜராத் மாநில பாஜக அரசு உடனே பதவி விலக வேண்டும் என்றார் நமச்சிவாயம்.

அமைச்சர்கள் ஷாஜஹான், கந்தசாமி, எம்.எல்.ஏக்கள் அனந்தராமன், பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி,  தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், நிர்வாகிகள் ஏகேடி ஆறுமுகம், தேவதாஸ், நீலகங்காதரன், விநாயகமூர்த்தி, பெத்தபெருமாள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com