சசிகுமார் படுகொலை: பழிவாங்கும் நோக்கில் நடந்ததா?

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை பழிவாங்கும் நோக்கில் நடந்துள்ளது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை பழிவாங்கும் நோக்கில் நடந்துள்ளது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (37). இவர், 2016- செப்டம்பர் 22-ஆம் தேதி கவுண்டர் மில்ஸ் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சிபிசிஐடி சிறப்பு தனிப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், இக்கொலை தொடர்பாக கோவை சாய்பாபா காலனி கே.கே.நகரைச் சேர்ந்த சதாம் (27) என்பவரை கருமத்தம்பட்டியில் வைத்து ஆகஸ்ட் 2-ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முபாரக் உள்ளிட்ட மூன்று பேரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
சதாமை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது சதாமை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி கே.ஆர்.மதுரசேகரன் அனுமதி அளித்தார்.
பழிவாங்கும் நோக்கில் கொலை?
இதைத் தொடர்ந்து , காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு சதாம் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டார். சிபிசிஐடி அலுவலகத்துக்குள் வெளி நபர்கள் நுழைய முடியாதபடி உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு ஆயுதப் படை போலீஸார் துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சதாமைப் பார்க்க வெள்ளிக்கிழமை இரவு அங்கு வந்த அவரது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சதாமிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், 2016-செப்டம்பர் மாதம் கணபதியில் பெயின்டர் ஹக்கீம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கும் விதமாகவே சசிகுமார் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தின்போது, முபாரக்குக்கு இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதாக மட்டுமே சதாம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கோவை சிபிசிஐடி அலுவலகத்துக்கு மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த சிபிசிஐடி போலீஸாரும், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் வந்துள்ளனர். மேலும், சசிகுமார் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சதாமை அழைத்துச் சென்று விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com