நீட் தேர்வுக்கு விலக்கு: குடியரசுத் தலைவருக்கு கடிதம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலத்தில் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
நீட் தேர்வுக்கு விலக்கு: குடியரசுத் தலைவருக்கு கடிதம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலத்தில் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று, நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, சேலத்தில் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்து மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், நூற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கடந்த பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் கட் - ஆப் மதிப்பெண்கள் அதிகம் பெற்றும் நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத சேலத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டு, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டம் குறித்து அனைத்து மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் கூறுகையில், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வைக் கண்டித்து முதல் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தரவேண்டிய தமிழக அரசு தூங்கிக் கொண்டிப்பதைத் தட்டி எழுப்பிடும் வகையில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவருக்கு 10,000 கடிதம் அனுப்பும் போராட்டமும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறுகையில், சிறு வயது முதல் மருத்துவ கனவோடு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதே போன்று அதிக மதிப்பெண்கள் பெற்ற பலரும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல், பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com