மனிதர்களைத் தொடர்ந்து மாடுகளுக்கும் 'ஆதார்'

மனிதர்களுக்கு தனி நபர் அடையாள அட்டை (ஆதார்) வழங்குவதைப் போலவே மாடுகளுக்கும் தனித்த அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாடுகளின் தனித்த அடையாள அட்டை விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்கிறார் கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை  இணை இயக்குநர் (பொறுப்பு) கே.ராமச்சந்திரன். (வலது) மாடுகளின் உரிமையாளர்களுக்கு 3 வர்ணங்களி
மாடுகளின் தனித்த அடையாள அட்டை விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்கிறார் கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கே.ராமச்சந்திரன். (வலது) மாடுகளின் உரிமையாளர்களுக்கு 3 வர்ணங்களி

மனிதர்களுக்கு தனி நபர் அடையாள அட்டை (ஆதார்) வழங்குவதைப் போலவே மாடுகளுக்கும் தனித்த அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மத்திய பால்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் நாடு முழுவதும் உள்ள மாடுகளுக்கு தனித்த அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல அட்டை (ஹெல்த் கார்டு) என்ற பெயரில் வழங்கப்பட உள்ள இந்த அட்டையை தமிழகத்தில் முதல் கட்டமாக கோவை, சேலம், வேலூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வழங்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, சோதனை அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள், கிளை மருந்தகங்கள் உள்ளிட்ட 105 மையங்கள் மூலமாக இந்த அட்டைகள் வழங்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, கோவை கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கே.ராமச்சந்திரன் கூறியதாவது:
நாடு முழுவதிலும் உள்ள மாடுகளின் உடல் நலனைக் கண்காணிக்கவும், எண்ணிக்கை, பெருக்கம், நோய் பரவல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கவும், பால் பெருக்கத்தை அதிகரிக்கவும் ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்த அடையாள எண் (யு.ஐ.டி.) வழங்கப்பட உள்ளது. இதற்காக பார்கோடு கொண்ட பாலியூரித்தேனால் ஆன அட்டை ஒவ்வொரு மாட்டின் காதிலும் பொருத்தப்படும்.
மேலும், மாட்டின் உரிமையாளர்கள் கைகளில் ஒரு நல அட்டை வழங்கப்படும். அதில், மாட்டின் புகைப்படம், அடையாளங்கள், வயது, அடையாள எண், இனம், சினை ஊசி போட்ட விவரங்கள், ஏற்பட்ட நோய்கள், அளிக்கப்பட்ட சிகிச்சைகள், எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார், மாட்டின் கன்றுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் இடம் பெறும்.
அத்துடன், இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். சேகரிக்கப்படும் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால் மாநிலம் முழுவதிலும் உள்ள மாடுகளின் விவரங்களை சென்னையில் உள்ள அதிகாரிகளாலும், தில்லியில் உள்ள உயர் அதிகாரிகளாலும் உடனடியாகக் காண முடியும்.
கலப்பின மாடு, நாட்டு மாடு, எருமை ஆகியவற்றுக்கு 3 தனித்தனியான வர்ணங்களில் இந்த அட்டை வழங்கப்படும். அனைத்து மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு, மாவட்டம் வாரியாக எத்தனை கால்நடைகள் உள்ளன, அவற்றில் எத்தனை கால்நடைகளுக்கு சினை ஊசி போடப்பட்டுள்ளது, அதில் எத்தனை மாடுகள் கருவுற்றுள்ளன என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
சினை ஊசி போடப்பட்ட மாடுகள் சினை பிடித்துள்ளதா, சினை பிடிக்காவிட்டால் எப்போது மீண்டும் ஊசி போட வரவேண்டும் என்பது போன்ற விவரங்கள் செல்லிடப்பேசி மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் உரிமையாளர்களிடம் கேட்டும், வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் அட்டைகளைத் தயார் செய்து வழங்கத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தில் ஏதேனும் இடையூறுகள், குளறுபடிகள் இருந்தால் அவற்றைக் களைந்துவிட்டு மற்ற மாவட்டங்களுக்குப் பணிகளை விரைவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
மாடுகளுக்கு தனித்த அடையாள அட்டையை வழங்குவதன் மூலமாகத் திருட்டு, இறைச்சிக்காக கடத்தப்படுவது போன்றவையும் கட்டுப்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com