மொழியைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி: கவிஞர் வைரமுத்து பேச்சு

மொழியைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
சிந்தனை அரங்கில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து. உடன், மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நந்தா கல்விக் குழுமங்களின் தலைவர் வெ.சண்முகன்.
சிந்தனை அரங்கில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து. உடன், மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நந்தா கல்விக் குழுமங்களின் தலைவர் வெ.சண்முகன்.

மொழியைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் 13-ஆவது புத்தகத் திருவிழாவின் 5-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்கில் 'அறிவே கடவுள்' எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:
புத்தகங்களை தனி உடைமையாக வைத்துக் கொள்ளாமல் பொதுவுடைமையாக்க வேண்டும். மனிதன் வளர வளர கேள்விகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. கேள்விகள் வளர வளர அறிவு வளர்ந்துகொண்டே போகிறது.
இரு ஆண்கள் சந்தித்தால் கடைசியாக என்ன புத்தகம் படித்தாய் என்றும், இரு பெண்கள் சந்தித்தால் கடைசியாக எப்போது பாட்டு பாடினாய் என்று கேட்பதுதான் நாகரிகத்தின் உச்சம்.
பூட்டிக்கிடந்த உலகம் திறக்கப்பட்டு 35 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்ளங்கை அளவில் உள்ள உலகில் சுண்டுவிரல் அளவுக்குத்தான் நாம் கண்டுபிடித்துள்ளோம். மிச்சமுள்ள முழுவதையும் கண்டுபிடிக்கும்போது மனிதன்தான் கடவுள். கடவுள்தான் மனிதன் என்ற நிலை ஏற்படும்.
மொத்த வானத்தையும் மறக்கடித்து, தன்னை மட்டும் கவனிக்கச் செய்வதில்தான் பறவையின் வெற்றி அடங்கியுள்ளது. அதுபோலவே மனிதர்களும். மனிதர்களுக்கு தகவலறிவு, கல்வியறிவு, மெய்யறிவு என மூன்று அறிவுகள் உள்ளன. மண்ணில் பிறந்த எல்லாம் மண்ணுக்குச் சொந்தம் என்பதுதான் மெய்யறிவு. இந்த அறிவை அடைந்தவர் உயர்ந்த இடத்துக்குச் சென்று விடுகிறார்கள்.
மனிதர்களின் கேள்விக்கு விடை கிடைக்காத இடத்துக்கு கடவுள் வந்து விடுகிறார். அந்த இடத்தில் அறிவுப் பூட்டைத் திறக்கும்போது, கடவுள் புன்சிரிப்புடன் நகர்ந்து கொள்கிறார்.
இளைஞர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். நம்மைக் கவ்வும் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். மற்றவரின் கண்ணீரை தன் கண்ணீராக நினைப்பவரே அறிவாளி.
இன்னும் 30 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத குப்பைத் தொட்டியாக பூமி மாறிவிடும். வேறு கிரகத்தில் மனிதர்கள் குடியேறிவிடுவார்கள். மனிதனே கடவுள், கடவுளே மனிதன் என்ற நிலை உருவாகிவிடும்.
வருங்காலத்தில் அறிவுதான் உலகுக்கு தலைமை தாங்கும், வழிநடத்தும். 2050-இல் சீனா முதல் வல்லரசாகவும், இந்தியா 2-ஆவது வல்லரசாகவும், அமெரிக்கா 3-ஆவது வல்லரசாகவும் இருக்கும் என பிரிட்டீஷ் ஆய்வுகள் கூறுகின்றன. அறிவைப் பொதுவுடமை செய்வதில்தான் இது சாத்தியமாகும். எல்லா கேள்விகளுக்கும் விடை உங்கள் சிந்தனைக்குப் பக்கத்தில் உள்ளது. வேட்டைக் கலாசாரம்தான் முதல் கலாசாரம். அதில் தோற்றவன் விவசாயக் கலாசாரத்தைக் கண்டுபிடித்தான். நீரைத்தேடி அலைந்த மனிதன், தன் காலடிக்கு கீழ் நீர் இருக்கிறது என்பதை 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் கண்டறிந்தான்.
மனிதன் கண்டறிந்த முதல் விஞ்ஞானம் மொழி. மொழியைக் கண்டறிந்தவனே உலகின் முதல் விஞ்ஞானி.
மூடநம்பிக்கையை அழிப்பதுதான் அறிவு. என்றைக்கு உங்களுக்குத் தெரியவில்லை என்று ஒப்புக்கொள்கிறீர்களோ அதுவே அறிவின் முதல்படி. கற்றுக்கொண்டு இருக்கும்போதுதான், நாம் எவ்வளவு கற்காமல் உள்ளோம் எனத் தெரிகிறது.
விதி என்பதும், கடவுள் என்பதும் ஆறுதலுக்காக மனிதன் கண்டுபிடித்த சுமைதாங்கிகள். விதியையும், கடவுளையும் கேள்வி கேட்பவன் மனித குலத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறான்.
இன்னும் முப்பது ஆண்டுகளில் ஐரோப்பாவை விட்டு மதங்கள் ஓடிவிடும். விஞ்ஞானம் விடை சொல்லும் வரை மதம், கடவுள் இருக்கும். விடை சொன்னால் இவற்றில் இருந்து மனிதன் விலகி விடுவான்.
தூங்கும் முன் வாசித்து விட்டுத்தான் தூங்குவேன் என்று இளைய தலைமுறையினர் சபதம் எடுங்கள். யோசிப்பதில் வாசிப்பதில் சந்தோஷம் கண்டால் நீங்களே கடவுள் என்றார்.
இக்கூட்டத்தில், மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நந்தா குழுமங்களின் தலைவர் வெ.சண்முகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com