தமிழை நேசிப்பதில் 'முதல்வர்' கருணாநிதி: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் புகழாரம்

தமிழை நேசிப்பதில் 'முதல்வர்' கருணாநிதி என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.

தமிழை நேசிப்பதில் 'முதல்வர்' கருணாநிதி என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற முரசொலி பவள விழாவில் அவர் பேசியது:-முரசொலி பவளவிழாவை அரசியல் ரீதியாக இல்லாமல், பத்திரிகையாளர்களின் விழாவாக நிகழ்த்தியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மேலும் பவளவிழாவில் பங்கேற்க தோழமைக் கட்சியினர் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு விடுத்ததற்காகப் பாராட்டுகள்.
சுதேசமித்திரன், நவசக்தி, தினமணி, தினந்தந்தி, தமிழ்நாடு, தினமலர் இப்படி எத்தனை எத்தனையோ பத்திரிகைகள் தமிழ் வளர்த்தன. காமராஜர் காலத்தில் பள்ளிகள் அதிக அளவில் திறக்கப்பட்டு சாமானியர்களுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்தபோது, பத்திரிகை படிக்கும் வழக்கம் அதிகரித்தது. படிக்கமட்டுமல்ல, சிந்திக்கவும் வேண்டும் என்று இளைஞர்களைத் தூண்டியவை இடதுசாரிக் கட்சியும், திராவிட இயக்கக் கட்சிகளும் நடத்திய அரசியல் பத்திரிகைகள். அவற்றில் இன்றும் தொடர்ந்து கொண்டிப்பது பெரியார் தொடங்கிய விடுதலையும், கருணாநிதி தொடங்கிய முரசொலியும்தான்.
மிக அதிகமாக முரசொலியால் விமர்சிக்கப்பட்டது தினமணியும், நானுமாகத்தான் இருப்போம். அதே சமயம் நல்ல செய்திகள் வெளியிடும்போது அதனை முதலில் பாராட்டுவதும் முரசொலியாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் முதல்வராகப் பலர் இருந்துள்ளனர், இருக்கவும் போகிறார்கள். ஆனால் தமிழை நேசிப்பதில் முதல்வராக இருப்பவர் கருணாநிதி மட்டுமே' என்றார் கி.வைத்தியநாதன்.
தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம்: முரசொலி பவளவிழா ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் சிறப்பைக் கொண்டு வரவில்லை. பத்திரிகை உலகுக்கே ஒரு விழாவாக அமைந்துள்ளது. கருத்துச் சுதந்திரத்துக்கும், உரிமைச் சுதந்திரத்துக்கும் தரப்பட்ட மரியாதையே இந்த விழாவின் சாராம்சம் ஆகும்.
எழுத்தும், படிப்பும் என்பதை யோகா போன்று கருதி அதனை பழக்கமாக மாற்றிக் கொண்டவர் கருணாநிதி. இது அரசியலில் மிகவும் அரிதான குணம். திமுகவுக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு பத்திரிகையைக் கொண்டு வருவது. கருத்து, சிந்தனைக்கு கொடுக்கக் கூடிய மதிப்பு அது.
டெக்கான் க்ரானிக்கிள் ஆசிரியர் பகவான்சிங்: முரசொலியை 75 ஆண்டுகள் நடத்துவது என்பது ஓர் உலக சாதனைதான். பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கருணாநிதி. சோவுக்கும் கருணாநிதிக்கும் இடையே போட்டி இருக்கும். ஆனால் கருணாநிதி போன்ற உழைப்பாளியும் மக்கள் மீது கவலைப்படுபவரும் உலகத்தில் இல்லை என்பார் சோ.
தினமலர் இணை ஆசிரியர் ரமேஷ்: ஜனரஞ்சகப் பத்திரிகைகளைத் தாண்டி தனித்துவமான நடை கொண்டது முரசொலி. எழுத்தாளரே பத்திரிகையாளரும், பத்திரிகையாளரே எழுத்தாளருமாக இருப்பது அபூர்வம். அந்த அபூர்வமாக கருணாநிதி இருந்தார். முரசொலி கட்சிப் பத்திரிகை என்றாலும், தமிழகத்தின் எல்லாத் தளங்களிலும் அது கவனத்தோடு படிக்கப்படுகிறது. கட்சியினர் முரசொலியை காதலோடு வாசிக்கின்றனர். நாங்கள் ஆவலோடு படிக்கிறோம்.
ஆனந்த விகடன் மேலாண்மை இயக்குநர் பா.சீனிவாசன்: இந்த மேடையில் கருணாநிதி நடுநாயகமாக உட்கார்ந்திருக்க வேண்டும். முரசொலி குறித்து பாட்டெழுதி அவரிடம் திரும்பத் திரும்பப் படித்துக் காண்பித்தால் அவர் மீண்டும் எழுந்து வந்துவிடுவார்.
முரசொலிதான் அவரின் மூத்த பிள்ளை . எழுத்துப் பாலத்தின் இந்த தொடர்ச்சி தொடர வேண்டும். ஏனென்றால், பத்திரிகைதான் எந்த இயக்கத்தையும் காப்பாற்றும், எந்த மொழியையும் காப்பாற்றும்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் அருண்குமார்: எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் முரசொலியைப் படிக்காமல் தமிழக அரசியலைத் தெரிந்து கொள்ள முடியாது என அறிந்தேன். அதனால் தமிழ் படித்து, முரசொலியைப் படிக்கத் தொடங்கினேன். முரசொலி இன்று புதிய தலைமுறைகளின் கையில் வந்துள்ளது. அவர்கள் சற்று சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து செய்திகளை வெளியிட வேண்டும்.
தினத்தந்தி பொது மேலாளர் சந்திரன்: முரசொலியும் தினத்தந்தியும் ஒரே ஆண்டில்தான் தொடங்கப்பட்டன. எங்கள் பத்திரிகையில் தினப்பலன் வரும். ஒருநாள் முரசொலி அலுவலகத்துக்கு வந்த கருணாநிதி, ஆசிரியரை அழைத்து முரசொலியில் தினப்பலன் போட வேண்டும் என்று உத்தரவிட்டார். முரசொலியில் எப்படி தினப்பலன் போடுவது என்று அவர் திகைத்து விட்டார். தினந்தோறும் திமுக கூட்டங்கள் எங்கெங்கு நடக்கிறது என்று தொகுத்து அதற்கு தினப்பலன் என்று பெயரிட வேண்டும் என்றார்.
நக்கீரன் ஆசிரியர் கோபால்: 75 ஆண்டு என்பது ஒரு வரலாறு. முட்டையிடும் கோழிக்குத்தான் அதன்வலி தெரியும் என்பது போல பத்திரிகையை வெளிக் கொண்டு வரும் சிரமம் பத்திரிகை ஆசிரியர்களுக்குத்தான் தெரியும். நெருக்கடி காலத்தில் அந்த கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து இந்திராகாந்தி ஹிட்லராக உருமாறுவது போல ஒரு கேலிச் சித்திரம் முரசொலியில் வெளிவந்தது. கருணாநிதியின் யோசனையில் ஓவியர் வரைந்தது அது. அந்த கேலிச்சித்திரத்தை அமெரிக்காவில் உள்ள பத்திரிகை பிரசுரித்ததால், முரசொலி அப்போதே உலகப்புகழ் பெற்றது. நெருக்கடி காலத்தில் நக்கீரன் வெளி வருவதற்கு உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி. முரசொலி வழியிலேயே நக்கீரனும் பயணிக்கும்.
தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார்: வெறும் செய்திகளை மட்டும் வெளியிடும் இதழ் அல்ல முரசொலி, செய்திகளை உருவாக்கும் களம். அதில் வந்த சில கட்டுரைகள் தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.
'உடன் பிறப்புகளே...' கடிதம் மூலம் அரசியலை மட்டும் கருணாநிதி கற்றுத் தரவில்லை. கலை, இலக்கியம், பண்பாடு அனைத்தையும் கற்றுத் தந்தார். பத்திரிகையாளர்களுக்கும் வழிகாட்டியாக கருணாநிதி திகழ்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com