தற்காப்பைவிட தன்மானமே முக்கியம்: நடிகர் கமல்ஹாசன்

அரசியலாகப் பார்க்கப்பட்டாலும் எனக்கு தற்காப்பு முக்கியம் அல்ல, தன்மானமே முக்கியம் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

அரசியலாகப் பார்க்கப்பட்டாலும் எனக்கு தற்காப்பு முக்கியம் அல்ல, தன்மானமே முக்கியம் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
முரசொலி நாளிதழின் 75-ஆவது ஆண்டு பவள விழா வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கமல்ஹாசன் பேசியது: நான் படித்த தமிழ் எல்லாம் செவிவழியாகத்தான். அதில் நான் கேட்ட இரண்டாம் குரல் கருணாநிதியுடையது. சிவாஜி பேசும் வசனமெல்லாம் அவரே பேசியது என்று நினைத்ததால் அது முதல் குரல். அந்தக் குரலுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி என்று அறிந்த காலத்தில் இருந்து அவருக்கு நான் ரசிகன்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வருகிறாரா என்று விசாரித்தேன். வருகிறார். ஆனால் பேசமாட்டார். கீழே இருந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பார் என்றனர். அப்போது நானும் கீழே இருந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்கு பின்பு என்னை நானே கண்ணாடியில் பார்த்தபோது, எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கப் போகிறேன், இது எவ்வளவு முக்கியமான விழா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். தற்காப்பு அல்ல முக்கியம், தன்மானம்தான் முக்கியம் என்று முடிவெடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தீர்மானித்தேன்.
இந்த மேடையில் அமர்ந்திருக்கும் பத்திரிகை ஆசிரியர்களுடன், பத்திரிகையை நடத்த முடியாமல் பாதியில் நிறுத்திய கடைநிலை பத்திரிகை ஆசிரியராக அமரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இவர்களுடன் அமரத் தகுதியானவனா என்று கூட யோசிக்காமல், எனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தட்டிப் பறித்துக் கொண்டேன் என்பது தான் உண்மை.
இது ஒரு பத்திரிகையின் வெற்றி விழா. 75 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை நடத்தியவர்களை, 90, 100 ஆண்டுகள் பத்திரிகை நடத்தியவர்கள் பாராட்டுகிறார்கள். இந்த விழாவில் அரசியல் விமர்சனம் செய்வீர்களா என்று கேட்கின்றனர். அதற்கு இது மேடையில்லை.
திராவிடம் என்பது முடிந்துவிட்டது என்று பேசுகின்றனர். தேசியகீதமான ஜனகணமனவில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை அது இருக்கும். திராவிடம் என்பது தென்னகத்தோடு நின்றுவிட்டது என்று நினைக்கின்றனர். நாடு தழுவியது இந்தத் திராவிடம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து மெதுவாகத் தள்ளி வரப்பட்டு இங்கு தேங்கியுள்ளது.
திராவிடம் நாடு தழுவிய இயக்கம் (பேன் இந்தியா மூவ்மென்ட்) திராவிடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார் நடிகர் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com