தினகரன் நியமனம் செல்லாது

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
தினகரன் நியமனம் செல்லாது

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், கட்சியின் துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
முதல்வரும், அதிமுக அம்மா அணியின் தலைமை நிலையச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். அவரது இடத்தில் வேறு எவரையும் கட்சித் தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்பமாட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வி.கே.சசிகலா, பொதுச் செயலாளராக கட்சியின் சட்டதிட்டங்கள்படி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டார்.
ஆனால், அசாதாரண சூழ்நிலையின் காரணமாக சசிகலாவால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும், பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளரான ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.
டிடிவி தினகரன் நியமனம் செல்லாது: கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டார். அவர் கடந்த பிப்ரவரியில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டதிட்ட விதிக்கு விரோதமானது.
அவர் தொடர்ந்து 5 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தால் அவரால் கட்சியின் எந்தப் பொறுப்பையும் சட்டதிட்ட விதிகளின்படி வகிக்க இயலாது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் டிடிவி தினகரன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மார்ச்சில் கடிதம் எழுதினார். தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறி அவர் அனுப்பிய கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்து விட்டது.
அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்த பொதுச் செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் விசாரணையில் இருந்து வருகிறது. இவற்றுக்கு மாறாக டிடிவி தினகரன் தன்னிச்சையாக கட்சிக்குப் பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொறுப்புகளை நிராகரியுங்கள்: ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி கட்சியை வழி நடத்தி வரும் நிலையில் கட்சியில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த டிடிவி தினகரனால் வழங்கப்படும் அறிவிப்புகள் அதிமுக தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது.
அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கட்சியின் சட்டதிட்ட விதிகள்படி செல்லக்கூடியவை அல்ல. அவற்றை கட்சித் தொண்டர்கள் நிராகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com