தில்லியில் முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ். இன்று இணைப்புப் பேச்சு?

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தில்லியில் வெள்ளிக்கிழமை
தில்லியில் முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ். இன்று இணைப்புப் பேச்சு?

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது இரு அணிகளையும் இணைப்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும், சசிகலாவின் நியமனத்தையும் அவர் கேள்விக்குறியாக்கியுள்ளார்.
கையெழுத்து இல்லை: அதிமுகவில் சசிகலா நியமித்த எந்த நியமனங்களும் செல்லாது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவே கட்சித் தலைமை அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை வி.கே.சசிகலா நியமித்தது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதுடன், அந்த அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி என மொத்தம் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதே சமயம், சசிகலாவிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளைப் பெற்ற அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் அந்த அறிவிப்பில் கையெழுத்திடவில்லை. இதன் மூலம், சசிகலாவின் எந்த நியமனங்களையும் தாங்கள் ஏற்கவில்லை என்பதை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு உறுதி செய்துள்ளது.
உறுதி செய்த பின் தில்லி பயணம்: சசிகலாவின் நியமனங்களையும், டிடிவி தினகரனையும் ஏற்கப் போவதில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் இருவரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அணிகள் இணைப்பு குறித்து நேருக்கு நேர் சந்தித்துப் பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. தில்லியிலேயே அனைத்து விஷயங்களையும் தீர்மானித்து விட்டு அதனை சென்னைக்கு வந்து செயல்படுத்திட முடிவு செய்திருப்பதாக அதிமுக அம்மா அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் ஆணையம் முடிவு: சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலாவின் நியமனம் செல்லாது என்ற உத்தரவு வரும் என அதிமுக அம்மா அணி நம்புகிறது. இதனால், சிறப்பு பொதுக் குழுவுக்கு அவசியம் இல்லை எனவும், தேர்தல் ஆணைய உத்தரவே சசிகலாவின் பதவியை பறித்து விடும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இதன் பிறகு, புதிதாக ஒருவரை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஒரு குழுவை அமைத்து கட்சியை வழிநடத்தலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான அத்தனை விடைகளும் இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தில்லியில் இருந்து திரும்பியவுடன் கிடைத்து விடும் என்பதே அதிமுக தரப்பில் இருந்து தரப்படும் தகவலாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com