முரசொலி ஒரு பீனிக்ஸ் பறவை: கவிஞர் வைரமுத்து

முரசொலி ஒரு பீனிக்ஸ் பறவைதான் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற முரசொலி பவள விழாவில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற முரசொலி பவள விழாவில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.

முரசொலி ஒரு பீனிக்ஸ் பறவைதான் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
முரசொலி பவள விழாவில் அவர் பேசியது: முரசொலியை கருணாநிதி தொடங்கியபோது அவருக்கு வயது 18. அது கனவு காண வேண்டிய வயது. திருமணத்துக்குப் பத்திரிகை அடிக்க வேண்டிய வயதில், திராவிடத்துக்கு பத்திரிகை அடித்தவர் கருணாநிதி. முரசொலியின் 2 ஆயிரம் பிரதிகளை அச்சடித்தார். அவரும் அவரின் நண்பரும் தலா ஆயிரம் பிரதிகளைத் தலையில் தூக்கிக் கொண்டு ஓடம்போக்கி நதியைக் கடந்து போனார்கள். முரசொலியைத் தூக்கிச் சுமந்த கருணாநிதியை தன்னையே தூக்கிப் போ என்று தமிழகம் பணித்ததே, இதுதான் அவரது லட்சியத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
கருணாநிதி முரசொலியைத் தொடங்கியபோது அவர் ஏழை, சாமானியர். அவரின் மூலதனம் தமிழ், விநியோகம் எல்லாம் லட்சியம், அச்சடித்த மை அவரது ரத்தம், அச்சடித்த தாள் அவர் தோல். சமுதாயத்துக்காக ஒரு லட்சியப் பத்திரிகை தொடங்கினார் கருணாநிதி. ஒரு போன்சாய் மரம் காடானதுதான் முரசொலியின் கதை.
வேறுபாடு உண்டு: மற்ற ஏடுகளுக்கும் முரசொலிக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஏடுகள் செய்தியை செய்தியாக மட்டுமே தந்தன. செய்திகள் எப்படி நிகழ்கின்றன என்பது மட்டுமல்லாமல், செய்திகள் எதிர்காலத்தில் எப்படி நிகழ வேண்டும் என்று கூறியது முரசொலி. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரத்தை மாநிலங்களுக்கு பிரித்துத் தர வேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பியது.
நெருக்கடிநிலையின்போது, ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது எவ்வளவோ சோதனைகளை எதிர்கொண்டது முரசொலி. அத்தனை தடைகளையும் தாண்டி முரசொலி வெளிவந்தது. ராஜீவ் காந்தி படுகொலையின்போது முரசொலி அலுவலகம் எரிக்கப்பட்டது. முரசொலி எரிகிறதை நினைத்துத்தான் என் வயிறு எரிகிறது என்றார் கருணாநிதி.
முரசொலியும் ஒரு பீனிக்ஸ் பறவைதான். எரிக்கப்பட்ட பின்பும் முரசொலி பீனிக்ஸ் பறவை போல வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு இயக்கம், ஒரு நிறுவனம் லட்சியத்தில் உறுதிப்பாடு இருந்தால் அதை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
பங்கேற்றோர்: இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, ராஜேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தொழிலதிபர் சீனிவாசன், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் மாநிலங்களவைத் திமுக குழு தலைவர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், ஆ.ராசா, ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கே.என். நேரு, பொன். முத்துராமலிங்கம், இந்திர குமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கும், 'முரசொலி'யுடன் தொடர்புடையவர்களுக்கும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் அனைவரையும் வரவேற்றார். உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிகளை தமிழச்சி தங்கப்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.
கட்சிக் கொடி இல்லை: விழாவில் திமுக கொடிகள் எதுவும் கட்டப்படவில்லை. முரசொலி பவள விழாவைக் குறிக்கும் கொடிகள் பொதுவான வகையில் பறக்கவிடப்பட்டிருந்தன.

முரசொலி பவள விழாவை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற காட்சி அரங்க திறப்பு விழாவில் கருணாநிதியின் மெழுகு சிலையைப் பார்வையிடும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com