சிவாஜி சிலை அருகே எத்தனை விபத்து நடந்தது?: சீமான் கேள்வி

சிவாஜி சிலை அருகே எத்தனை விபத்து நடந்தது என்கிற புள்ளிவிவரம் யாரிடமும் இல்லை...
சிவாஜி சிலை அருகே எத்தனை விபத்து நடந்தது?: சீமான் கேள்வி

சிவாஜி சிலையைக் கடற்கரைச் சாலையில் நிறுவ திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இணையில்லா நடிப்புத் திறமையால் கலையுலகில் நிலையான இடம் பெற்றவர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் கடந்த 2001-ஆம் ஆண்டு காலமானார். அவர் கலை உலகுக்கு செய்த சேவை மற்றும் சாதனைகளையும் போற்றும் வகையில் அவருக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்து சிலை நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2006-இல் அப்போதைய ஆட்சியின்போது சென்னை மெரீனா கடற்கரையையொட்டி காமராஜர் சாலை- ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் முழு அளவிலான வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. இதை அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். இந்த நிலையில், போக்குவரத்து இடையூறாக உள்ளதால் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அப்பகுதியில் இருந்து சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்புப்படி சிலையை அகற்ற ஒப்புக்கொண்ட அ.தி.மு.க. அரசு, சிலையை அகற்ற கால அவகாசம் அளிக்கவும் கோரியது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அடையாறில் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்த பின் சிவாஜி சிலை அகற்றப்படும் என்றார். இந்த நிலையில் சென்னை அடையாறில் சத்யா ஸ்டுடியோ எதிர்புறம் கட்டப்பட்டு வந்த சிவாஜி மணிமண்டபம் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதனால் சிலை எப்போது வேண்டுமானாலும் அகற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. சிலையை அகற்றுவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சமூக நல பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை அகற்றும் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சிவாஜி சிலை அகற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் சிலையை மெரீனா கடற்கரையோரம் மற்ற சிலைகளின் வரிசையில் சிலையை நிறுவ உத்தரவிட வேண்டும்”என சிவாஜி பேரவையினர் அளித்த மனுவில் கூறியிருந்தனர். இவ்வழக்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பில் சிவாஜி சிலையை அகற்ற தடை இல்லை”என அறிவித்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 2 அன்று நள்ளிரவு இச்சிலையை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தது. மெரீனா கடற்கரையில் இருந்து அகற்றும் பணி நள்ளிரவு 1 மணி முதல், அதிகாலை 4 மணி வரையில் நடைபெற்றது. சிலை அகற்றப்பட்ட பின்னர் பெரிய கிரேன் மூலம் லாரியில் ஏற்றி சிவாஜி மணிமண்டபத்துக்குள் கொண்டு சென்றனர். பின்னர் சிவாஜி மணிமண்டபத்துக்குள் சிலையை நிறுவுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஃபெப்சி சங்கத்தின் தலைவர் செல்வமணி, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், சீமான் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். சிவாஜி சிலையை கடற்கரைச் சாலையில் ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கவேண்டும் என்று கூட்டாக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் சீமான் கூறியதாவது: கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலை திட்டமிட்டு அகற்றப்பட்டுவிட்டது. சிவாஜி சிலையை மீண்டும் வைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. கடற்கரைச் சாலையில் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோருக்குச் சமாதி இருக்கும்போது சிவாஜிக்குச் சிலை இருக்கக்கூடாதா? தமிழ் மண்ணுக்குச் சம்பந்தமில்லாதோர் சிலைகள் கடற்கரைச் சாலையில் உள்ளன. மாபெரும் கலைஞனுக்கு சிலை வைக்கக்கூட உரிமை இல்லையா? சிவாஜிக்கு அவமதிப்பு ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு அவமதிப்பு. சிவாஜி சிலை அருகே எத்தனை விபத்து நடந்தது என்கிற புள்ளிவிவரம் யாரிடமும் இல்லை என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com