எங்கள் எதிரியை தோற்கடிக்க முயற்சித்தோம்: குஜராத் தேர்தல் குறித்து சுப்ரமணியன் சுவாமி பேச்சு

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் எங்கள் எதிரியைத் தோற்கடிக்க முயற்சித்தோம், அவ்வளவே என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
எங்கள் எதிரியை தோற்கடிக்க முயற்சித்தோம்: குஜராத் தேர்தல் குறித்து சுப்ரமணியன் சுவாமி பேச்சு


சென்னை: குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் எங்கள் எதிரியைத் தோற்கடிக்க முயற்சித்தோம், அவ்வளவே என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக என்பது ஒரே ஒரு கட்சிதான். அதுவும் சசிகலா தலைமையில் இருக்கும் அணிதான் அதிமுக என்று கூறினார்.

குஜராத் தேர்தலில் வெற்றி பெற பாஜக நடந்து கொண்ட விதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அகமது பட்டேல் எங்கள் எதிரி என்பதால் அவரை தோற்கடிக்க முயற்சித்தோம். 44 வாக்குதான் கிடைத்தது. எங்களுக்குக் கிடைத்த 2 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அவர் வெற்றி பெற்றார். ஒரு தேர்தல் என்றால், காங்கிரசை தோற்கடிப்பது எங்கள் பொறுப்பு அல்லவா. அதைத் தானே செய்தோம் என்றார்.

மேலும், அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்த கேள்விக்கு, நான் சட்டப்படி பார்த்து சொல்வது என்னவென்றால் சசிகலா அணிக்குத் தான் தனி மெஜாரிட்டி இருக்கிறது என்று அப்போதே சொன்னேன். 3 அணி எல்லாம் கிடையாது. அங்கே ஒரு ஆள் இங்கே ஒரு ஆள் இருந்தால் அது அணியா? எனவே அதிமுகவில் 3 அணிகள் இருப்பதாக கூறுவது சரியல்ல என்று பதிலளித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மீது வழக்கு உள்ளது. அவர்கள் ஒவ்வொருவராக சிறைக்குச் சென்றுவிடுவார்கள். 

காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எல்லோரும் சிறைக்குப் போகப் போகிறார்கள். பிறகு, அவர்கள் செயற்குழு ஜெயிலில்தான் நடக்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கிறது என்று கருத்து கேட்டதற்கு, தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி நடக்கிறது என்று கவனிக்கவில்லை. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் அரசுகளும் எப்படி செயல்படுகின்றன என்று கவனிக்க முடியுமா? வேண்டுமானால் சிறிது நாள் இங்கே தங்கியிருந்து ஆட்சி எப்படி நடக்கிறது என்று பார்த்துச் சொல்கிறேன் என்று பதிலளித்தார் சுப்ரமணியன் சுவாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com