சசிகலாவின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதில் தாமதம் ஏன்?

அரசு ஊழியர் அல்லாத தனக்கு தவறாக தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதில் தாமதம் ஏன்?


புது தில்லி: அரசு ஊழியர் அல்லாத தனக்கு தவறாக தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குகளில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற விதி இருக்கும் நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 90 நாட்களாகியும் விசாரணைக்கு வரவில்லை.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் 15ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா உட்பட 3 பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மே மாதம் 10ம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவரைத் தொடர்ந்து நீதிபதி அமிதவராய் தலைமையிலான அமர்வு, சசிகலாவின் மறு சீராய்வு மனுவை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அதன்பிறகு, கடந்த ஜூலை 18ம் தேதி நீதிபதிகள் அமிதவராய், ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ரோஹிண்டன் நாரிமனின் தந்தை பாலி நாரிமன், ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா - சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்புக்காக ஆஜரானவர். எனவே அவரது மகன் சீராய்வு மனு மீதான விசாரணை அமர்வில் இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ரோஹிண்டன் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

அதன்பிறகு, இந்த சீராய்வு மனுவை நீதிபதி நவின் சின்ஹா விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றும் விசாரணைக்கு வரவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com