தினகரன் நியமனம் செல்லாது: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் மனு

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் செம்மலை, மா.ஃபா பாண்டியராஜன், முன்னாள் எம்பி பால் மனோஜ் பாண்டியன்ஆகியோர் மனு அளித்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது: அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச் செயலராக நியமித்ததையும், அவர் நியமிக்கப்பட்ட பிறகு அவரால் துணைப் பொதுச் செயலராக டிடிவி தினகரனை நியமித்ததையும் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியைச் சேர்ந்த நாங்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் ஒரு பகுதியினரான முதல்வர், அமைச்சர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி, டி.டி.வி. தினகரன் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், அதனால் அவர் அறிவித்த கட்சிப் பதவிகள் செல்லாது என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். ஏற்கெனவே சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் நாங்கள் அளித்துள்ள மனுவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அந்த தீர்மானத்தின் சில குறிப்புகளை எடுத்து பிரமாணப் பத்திரமாக சில ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் இப்போது தாக்கல் செய்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com