'பத்திரிகை உலகின் பீஷ்ம பிதாமகர்'

பத்திரிகையாளர் சா.விஸ்வநாதன் (சாவி) நூற்றாண்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.11) நடைபெற்றது. சாகித்திய அகாதெமி, பட்டாபிராம் இந்துக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா.விஸ்வநாதன் (சாவி) நூற்றாண்டு விழாவில் பத்திரிகையாளர் மாலனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முருகேசன்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா.விஸ்வநாதன் (சாவி) நூற்றாண்டு விழாவில் பத்திரிகையாளர் மாலனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முருகேசன்.

பத்திரிகையாளர் சா.விஸ்வநாதன் (சாவி) நூற்றாண்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.11) நடைபெற்றது. சாகித்திய அகாதெமி, பட்டாபிராம் இந்துக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
விழாவில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது: இதழியல் துறையில் காலம் கடந்து நிற்பவர் எங்கள் ஆசிரியர் சாவி. அவரது எழுத்து, சிந்தனை குறித்து இன்றைய இளைஞர்கள், மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சாவி எழுதிய நூல்களை மாணவர்களுக்கு சாகித்திய அகாதெமி குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும். நாட்டுடமையாக்கப்பட்ட ஆசிரியர் சாவியின் நூல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது பரவலாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
எழுத்தாளர் எஸ்.சிவசங்கரி: பத்திரிகை உலகின் பீஷ்ம பிதாமகன் சாவி சார். 1980-களில் என்னைப் போன்ற எழுத்தாளர்களையும் வாசகர்களையும் கேள்வி-பதில் நிகழ்ச்சி மூலம் முதன் முதலாக ஒருங்கிணைத்தவர். பல பத்திரிகையாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் உருவாக்கியவர்.
பத்திரிகையாளர் மாலன்: இன்றைய இளைஞர்கள் சாவி பற்றி தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் படிப்பதன் ஒரு நீட்சியாக இதழியலுக்கு மாணவர்கள் வர வேண்டும். மக்களோடு பேசுவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் இதழியல்தான் ஒரு சாதனமாக விளங்குகிறது.
முனைவர் சொ.சேதுபதி: எழுத்து என்பதற்கு தமிழில் சித்திரம் என்ற பொருள் உண்டு. கோடுகளின் மூலமாக ஒரு ஓவியத்தைப் படைத்துக் காட்டி கோபுலு படம் வரைவது போன்று, எழுத்துக்களை கோடுகளின் மூலமாக எழுதிக் காட்டி அந்தச் சித்திரத்தின் உள் விளக்கங்களை எழுதிக்காட்டிய ஒரு அற்புதத்தை சாவி செய்தார்.
பங்கேற்றோர்: இந்த நிகழ்ச்சியில் கட்டுரையாளர் இராணி மைந்தன், பத்திரிகையாளர் என்.ரவி பிரகாஷ், சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் கி.நாச்சிமுத்து, பொறுப்பு அலுவலர் அ.சு.இளங்கோவன், இந்துக் கல்லூரியின் செயலர் எம்.வெங்கடேச பெருமாள், முதல்வர் வி.லட்சுமி, இயக்குநர் என்.இராஜேந்திர நாயுடு, சாவியின் மகள்கள் ஜெயந்தி விஸ்வநாதன், உமா, தமிழ்த் துறைத் தலைவர் எஸ்.எம்.சங்கவை, பேராசிரியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com