புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம்: மு.ஆனந்தகிருஷ்ணன் தகவல்

புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிய பாடத் திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம்: மு.ஆனந்தகிருஷ்ணன் தகவல்

புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிய பாடத் திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கல்வித் துறையில் புதிய பாடத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கருத்தறியும் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த புதிய பாடத் திட்டக் குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான மு.ஆனந்தகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்றைய பள்ளி பாடத் திட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் பாடத் திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாடத் திட்டம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், மேல் படிப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கேள்வி, பதிலை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாமல் போகிறது.
இதனால், உயர் கல்விப் பயிலச் செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை மாற்ற முதலில் மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படைத் திறமையை வளர்க்க வேண்டும்.
எனவே, மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படைத் திறமைகளை அதிகரிக்கும் வகையிலும், வருங்காலத் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பவும் பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்.
மேலும், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டம் அமைக்கப்படும். அதில், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
இதில், பங்கேற்ற கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், புதிய பாடத்தில் என்னென்ன இணைக்க வேண்டும் என பாடத் திட்டக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை, மனப்பாட முறையைப் பின்பற்றக்கூடாது, தொடக்கக் கல்வி முதலே ஆங்கிலத் திறனை அதிகரிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்காலத்துக்கு ஏற்பத் தேவையான பாடத் திட்டம், அரசியல், அரசு நிர்வாகம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் இணைக்க வேண்டும். அதேவேளையில், விளையாட்டு, என்சிசி, என்எஸ்எஸ் கூடுதல் முக்கியத்துவம், புத்தகச் சுமை குறைப்பு, வாழ்க்கைக் கல்வி, தொழிற்கல்விப் பாடங்களை நவீனப்படுத்துவது, தொழில் சார்ந்த தனிப் பயிற்சி, உளவியல் கல்வி போன்றவற்றை புதிய பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்வது குறித்தும் வலியுறுத்தப்பட்டது என்றனர்.
இக்கூட்டத்தில்,எழுத்தாளர் எஸ்.தியடோர் பாஸ்கரன், எஸ்.எஸ்.என்.கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கலா விஜயகுமார், கணித அறிஞர் ஆர்.ராமானுஜம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.ராமசாமி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் இணை இயக்குநர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பாடத் திட்டம்) இணை இயக்குநர், தேர்வுத் துறை முன்னாள் இயக்குநர் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com