9 லட்சம் எல்இடி விளக்குகள் பொருத்தும் திட்டம்: ஒப்பந்தப் புள்ளிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் 9.06 லட்சம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 9.06 லட்சம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பின் உறுப்பினர் சி.கார்த்திகேயன் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:
தமிழகம் முழுவதும் ரூ.329 கோடி மதிப்பில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 310 எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்தும் திட்டத்துக்கு, தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. தேசிய பரிசோதனை அங்கீகாரக் குழுவின் ஆய்வகங்களில், எல்.இ.டி. விளக்கு மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பாமல், சென்னை மாநகராட்சியின் மின் துறையே பரிசோதனை செய்யும் என, ஒப்பந்தப்புள்ளியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, சட்ட விரோதமானது. அதேபோன்று, ஏற்கெனவே, இது போன்ற பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்து, 50 சதவீத பணிகளை முடித்த நிறுவனங்கள் அதற்கான சான்றுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மார்ச் 29-இல் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: பொது இடங்களில் உள்ள தெரு விளக்குகளை கிராம பஞ்சாயத்துக்கள்தான் பராமரித்து
வருகின்றன. கடந்த 2014-15-ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள், சுமார் ரூ.420 கோடியை மின் கட்டணமாக செலுத்தியுள்ளன. தெரு விளக்கு பராமரிப்புக்கு ரூ.230 கோடி செலவு செய்துள்ளன.
மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்க, "டியூப் லைட்டுகளுக்கு' பதில் "எல்.இ.டி. பல்புகளை' பயன்படுத்த அரசு முடிவு செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து தெரு விளக்குகளிலும் "எல்.இ.டி. பல்புகளை' பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தரமான எல்.இ.டி. பல்புகளை கொள்முதல் செய்வதற்காக ஒரு சில நிபந்தனைகளை உருவாக்கியுள்ளது.
மேலும் ஒப்பந்ததாரர்கள் வழங்கும் பல்புகள் தரமானது தானா? என்பதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சி மின் துறை பரிசோதனை செய்யும் என்று நிபந்தனை விதித்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் தன்னிச்சையானது என்றோ அல்லது குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரருக்கு சாதகமாகவோ அல்லது தமிழக அரசு உள்நோக்கத்துடன் உருவாக்கியுள்ளதாகவோ தெரியவில்லை எனக்கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com