அதிமுக அமைச்சர்களை நம்பி இல்லை: திவாகரன் பரபரப்பு பேட்டி

அமைச்சர்களை நம்பி அதிமுக கட்சி இல்லை. தொண்டர்களை நம்பிதான் கட்சி உள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
அதிமுக அமைச்சர்களை நம்பி இல்லை: திவாகரன் பரபரப்பு பேட்டி


மதுரை: அமைச்சர்களை நம்பி அதிமுக கட்சி இல்லை. தொண்டர்களை நம்பிதான் கட்சி உள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் டிடிவி.தினகரன் மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தை நாளை திங்கள்கிழமை (ஆக.14) மதுரை மாவட்டம் மேலூரில் தொடங்குகிறார். அங்கு மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு பேசுகிறார்.

அப்போது, பாஜக மீதான தாக்குதலை தனது ஆதரவாளர்கள் மூலம் வெளிப்படுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக மறைமுக அரசியலை மட்டுமே மேற்கொண்டு வந்த திவாகரன், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திவாகரன் கலந்துகொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர் சில ஆலோசனைகளையும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதன் மூலம் முதல் முறையாக நேரடியாக கட்சியினருடன் நின்று ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் திவாகரனிடம் செய்தியாளர்கள் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர்கள் வருவார்களா? என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த திவாகரன், அமைச்சர்களை நம்பி அதிமுக கட்சி இல்லை. அடிமட்டத் தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது. அமைச்சர் பதவி என்பது காற்று அடைக்கப்பட்ட பலூன் போன்றது. அமைச்சர்கள் பதவிக்கெல்லாம் தற்போது மரியாதை கிடையாது என்றார்.

மேலும், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் ஆகிய 3 பேரையும் ஒரே மாதிரியாகவே தான் கருதுகிறேன் என்றார்.

தொண்டர்களின் ஆதரவு குறித்து கேட்டதற்கு முதல் கட்டமாக டிடிவி தினகரன் திட்டமிட்டிருக்கும் 9 பொதுக்கூட்டங்களும் முடிந்தபிறகுதான் தொண்டர்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com