காவல், வேளாண்மை, வணிகவரி துறைகள் நல் ஆளுமை விருதுக்குத் தேர்வு

புதுமுக சிந்தனைகளைப் புகுத்தி திட்டங்களைச் செயல்படுத்தும் அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் நல் ஆளுமை விருதுகளுக்கு இந்த ஆண்டு மூன்று அரசுத் துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதுமுக சிந்தனைகளைப் புகுத்தி திட்டங்களைச் செயல்படுத்தும் அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் நல் ஆளுமை விருதுகளுக்கு இந்த ஆண்டு மூன்று அரசுத் துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

காவல், வேளாண்மை மற்றும் வணிகவரிகள் ஆகிய துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சாதனைப் பிரிவில் ஒருவர் கூட தேர்வாகவில்லை. அரசுத் துறைகளில் புதிய திட்டங்களை காலத்துக்கு ஏற்ப புதிய அம்சங்களைக் கொண்டு செயல்படுத்தும் துறைகளுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போதும் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விருதுகளுக்கு உரியோரைத் தேர்வு செய்ய தனிப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் சாதனைகளைப் படைத்த தனிநபர்கள், அரசு ஊழியர் குழு மற்றும் அரசுத் துறைகள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு யார், யாருக்கு? இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி (ஆக.15) நல் ஆளுமை விருதுகள் மூன்று அரசுத் துறைகளுக்கு அளிக்கப்பட உள்ளன. விருதுக்கு உரிய துறைகளைத் தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுக் கூட்டம் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுக்கு தமிழ்நாடு காவல் வீட்டு வசதிக் கழகம், வேளாண்மைத் துறை ஆணையரகம், வணிக வரிகள் துறை ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.2 லட்சம், சான்றிதழைக் கொண்டது.
காவல் வீட்டு வசதிக் கழகத்துக்கு...: தமிழ்நாடு காவல் வீட்டு வசதிக் கழகமானது காவலர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் பணியுடன், கட்டுமானத்துக்குத் தேவையான உப பொருள்களையும் தயாரித்து வருகிறது. அதாவது, சிமென்ட் செங்கல், வண்ண வண்ண சிமென்ட் கற்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறது. இந்தப் புது முயற்சிக்காக காவல் வீட்டு வசதிக் கழகத்துக்கு நல் ஆளுமை விருது அளிக்கப்படுகிறது.
வேளாண்மைத் துறை...: இதேபோன்று, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 15 லட்சத்து 37 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கும் பணியில் வேளாண்மைத் துறை ஈடுபட்டுள்ளது. இந்த மிகப்பெரிய இலக்கை எய்தி வரும் அந்தத் துறைக்கு நல் ஆளுமை விருது அளிக்கப்படுகிறது.
வணிக வரிகள் துறை...: மூன்றாவதாக, வணிகவரிகள் துறைக்கு விருது கொடுக்கப்பட உள்ளது. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் வணிக வரித் துறையின் முழுமையான கணினி வழித் தீர்வுத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் வணிகவரித் துறையில் உள்ள 554 அலுவலகங்களுக்கு கணினியும், இணையதள தொடர்பு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் கணினி மற்றும் இணையம் வழி இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய முயற்சியைப் பாராட்டும் வகையில் வணிகவரிகள் துறைக்கு நல் ஆளுமை விருது அளிக்கப்படுகிறது.
சத்யகோபாலுக்கு பாராட்டுச் சான்று: தனிநபர் பிரிவில் யாருக்கும் விருதுகள் அளிக்கப்படவில்லை. அதே சமயம், இரண்டு முக்கியப் பிரமுகர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. கல்லீரல் மற்றும் அது சார்ந்த நோய்கள் சிகிச்சை மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியின் இரைப்பை-குடல்-கல்லீரல் மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் கே.நாராயணசாமி, மரம் நடுதலில் தண்ணீர் தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் கண்டறிந்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றுகள் அளிக்கப்பட உள்ளன.
சுதந்திர தின விழாவில்...: தலைமைச் செயலக வாயிலில் (கோட்டை கொத்தளம்) செவ்வாய்க்கிழமை (ஆக. 15) நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com