சிதம்பரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்

சிதம்பரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் சனிக்கிழமை மதியம் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

சிதம்பரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் சனிக்கிழமை மதியம் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் வளைவு அருகே சென்றபோது, பரங்கிப்பேட்டையிலிருந்து பைக்கில் வந்த 3 பேர் பேருந்தை முந்த முயன்றனர். அப்போது, கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.
இதில் பைக்கில் வந்த பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ராம்குமார் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்ற இருவரான ஜெயக்குமார், அருள்மணி ஆகியோர் பலத்த காயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து உயிரிழந்த ராம்குமார் மனைவி ஜெயலட்சுமி அளித்தப் புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் பேருந்து ஓட்டுநர் பிரபு (32) மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து சிதம்பரம் கிளை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் சுந்தரம், புதுசத்திரம் காவல் நிலையத்துக்குச் சென்று, பேருந்து ஓட்டுநர் மீதான வழக்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்தனராம். இதனையடுத்து சிதம்பரம் கிளை அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்காமல் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன், வட்டாட்சியர் மகேஷ், நகர காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் ஆகியோர், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் செந்தில், கிளை மேலாளர் சுந்தரம் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட மாட்டார், வழக்கின் மீதான நடவடிக்கை கைவிடப்படும் என தெரிவித்ததை அடுத்து, போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் கைவிட்டனர். இதனையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com