தமிழகத்தில் 240 தாலுகாக்களில் குடிநீர்ப் பற்றாக்குறை

தமிழகத்தில் 240 தாலுகாக்களில் குடிநீர்த் பற்றாக்குறை உள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 240 தாலுகாக்களில் குடிநீர்த் பற்றாக்குறை உள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை கொள்கையில் நீர்த் தட்டுப்பாடு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:
நாட்டிலுள்ளவற்றில் 3 சதவீத நீர் ஆதாரங்களை மட்டுமே தமிழகம் பெற்றுள்ளது. தனிநபர் பெறும் நீரின் அளவு தேசிய சராசரிப்படி 1,545 கனமீட்டராக இருக்க, தமிழகத்தின் சராசரி 800 கனமீட்டராக உள்ளது.
ஆண்டு மழைப் பொழிவு தமிழகத்தில் 970 மில்லி மீட்டர். மாநிலத்தின் பெரும்பகுதிகள், மேற்குமலைத் தொடரின் மழை மறைவுப் பகுதியில் உள்ளன. தென்மேற்குப் பருவமழை மூலம் குறைந்த அளவு மழையையே தமிழகம் பெறுகிறது.
240 தாலுகாக்கள்: தமிழகத்தில் உள்ள 17 ஆற்று வடிநிலங்களில் 16 -இல் நீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. ஒன்று மட்டுமே உபரி நீரைப் பெற்றுள்ளது. பயன்படுத்தத்தக்க நிலத்தடி நீர் செறிவூட்டம் என்பது 22 ஆயிரத்து 423 மில்லியன் கன மீட்டராக உள்ளது. நீர் நிலையைப் பொருத்தவரை தமிழகத்தின் 385 தாலுகாக்களில் 145 பாதுகாப்பானவையாக உள்ளன. 57 தாலுகாக்கள் ஓரளவு இடர்ப்பாடு மிக்கவை. 33 இடர்ப்பாடு மிக்கவை. 142 நீர் மிகையாகப் பயன்படுத்தப்பட்ட தாலுகாக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 8 தாலுகாக்களில் உவர் தன்மை கொண்டதாக நீர் மாறியுள்ளது.
நீர் தொடர்பான சவால்கள்: பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் தற்போது குறைந்த அளவே கிடைக்கும் நீர், மேலும் குறைய வாய்ப்புள்ள நிலையில், அனைத்துத் துறைகளிலும் நீரின் தேவை அதிகரித்துள்ளது. அதிக அளவில் நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது.
பாசனத்துக்காக மேற்பரப்பு நீர் மிகையாகவும், பயனற்ற வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், நீர்வழிகள், பிற நீர்நிலைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்கொள்ளும் நடவடிக்கைகள்: தமிழகத்தில் நீர்ப் பற்றாக்குறை உள்ள சூழலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர் ஆதாரங்கள் மேலாண்மை குறித்த உத்திகளும் முடுக்கி விடப்பட உள்ளன.
நீர் ஆதாரங்கள் குறித்து விரிவான திட்டமிடல், தகவல்கள் பட்யலிடப்படும். இதன்மூலம் நீர் குறித்த தகவல் களஞ்சியம் வலுப்படுத்தப்படும். புவியியல் தகவல் ஏற்பாட்டு முறை (ஜி.பி.எஸ்.,) தொலையுணர்வு சாதனம் போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தி, மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் ஆதாரங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி வளமான, உண்மையான நீர் ஆதாரங்களின் வரிவான தகவல் பட்டியல் உருவாக்கப்படும்.
கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், கடல்நீரை அதிகளவு குடிநீராக மாற்றுதல் போன்ற புதிய நீர் ஆதாரங்கள் உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும். சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக பெரிய அளவிலான கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை தமிழக அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. மேலும், கிடைக்கும் நீரின் அளவைப் பெருக்குவதற்கு இந்த முயற்சி மீண்டும் தொடங்கப்படும்.
ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் சாக்கடை நீர், தொழிலகக் கழிவு நீர் கலப்பதைத் தடை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மிகவும் மாசுபட்ட நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மறுசீரமைப்பு செய்யவும் திட்டம் வகுக்கப்படும்.
ஆக்கிரமிப்புகள், திரவ, திடக் கழிவுகளில் இருந்து நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்காக இப்போதுள்ள சட்டம் சார்ந்த கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com