தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் தகுதிப் பட்டியலைத் தயார் செய்ய மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் தகுதிப் பட்டியலைத் தயார் செய்ய மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை தகுதிப்பட்டியலை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசாணை வெளியீடு: நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக பிரத்யேக அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
தில்லிக்கு விரைந்த அமைச்சர்கள்: இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக பிரதமர், மத்திய அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்திக்க தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் குழுவினர் தில்லி சென்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தில்லியில் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார். இதற்காக, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சுமார் ஒரு வாரம் தில்லியில் முகாமிட்டனர்.
இருப்பினும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் வகையில் மத்திய அரசு
எந்த சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேல்முறையீடு: இதற்கிடையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், 85 சதவீத ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
அனைத்துக் கதவுகளும் அடைப்பு: இரண்டு வாய்ப்புகளையும் இழந்ததால் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கோ அல்லது மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கோ அனைத்து வழிகளும் அடைபட்டு விட்டன.
இதனால் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதிப்பட்டியலைத் தயார் செய்து கலந்தாய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு: நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதிப்பட்டியலைத் தயார் செய்யுமாறு மருத்துவக் கல்வி அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் உயர் அதிகாரி, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 13) மாலைக்குள் தகுதிப்பட்டியலைத் தயார் செய்ய சுகாதாரத் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
நீட் தேர்வு மதிப்பெண் குறித்த தரவுகள் எங்களிடம் தயாராக உள்ளன. எனவே தகுதிப்பட்டியலைத் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். திங்கள்கிழமை (ஆக. 14) மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.
உடனடியாகக் கலந்தாய்வு: திங்கள்கிழமை தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இது தொடர்பாக சனிக்கிழமை பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு இருநாள்களில் வெளியாகும்.
மேலும் மாணவர் சேர்க்கை தாமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com