புதுச்சேரி - ஹைதராபாத் இடையே ஆக. 16-இல் விமான சேவை தொடக்கம்

மத்திய அரசின் "உதான்' திட்டத்தின் கீழ், வருகிற 16-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி - ஹைதராபாத் இடையே ஆக. 16-இல் விமான சேவை தொடக்கம்

மத்திய அரசின் "உதான்' திட்டத்தின் கீழ், வருகிற 16-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் "உதான்' திட்டத்தின் கீழ் வருகிற 16-ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கு விமான சேவை தொடங்க உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான சேவை நிறுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துவிட்டது. தற்போது விமான சேவை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும்.
தற்போது புதுச்சேரி - ஹைதராபாத், புதுச்சேரி - விஜயவாடா இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்கவுள்ளது. விரைவில் பெங்களூரு, கோவை, கொச்சி, திருப்பதி ஆகிய இடங்களுக்கும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை துறைமுகத்தில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக, முகத்துவாரத்தில் 3,000 கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி 95 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்புள்ளதாகச் சிலர் கூறி வருகின்றனர். துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தால் புதுவை மாநிலத்துக்கு வருவாய் கிடைக்கும். வேலைவாய்ப்புகளும் பெருகும்.
மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். ஆனால், சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் விரைவில் பாஜக ஆட்சி மலரும் என்றும் அந்தக் கட்சியினர் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது.
மத்திய அரசிடமிருந்து திட்டம் சாரா செலவுகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 567 கோடிதான் பெற்றுள்ளோம். மேலும், மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய 10 சதவீத நிதி இன்னும் கிடைக்கவில்லை. எனவே, ரூ. 1,250 கோடி கூடுதல் நிதிக்காக மத்திய அரசை அணுகியுள்ளோம்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளங்களில் கூறும் கருத்துகளுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை. அவர் எனக்கு நேரிடையாகக் கடிதம் எழுதட்டும்.
தொகுதிகளில் குறை கேட்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். எனது தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் களைய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com