ஆதார் இல்லாவிட்டால் பராமரிப்புத் தொகை இல்லை: பாதிக்கப்படும் மாற்றுத் திறனாளிகள்

ஆதார் அட்டை இல்லாததால் தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் பராமரிப்புத் தொகை கடந்த இரு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது.
ஆதார் இல்லாவிட்டால் பராமரிப்புத் தொகை இல்லை: பாதிக்கப்படும் மாற்றுத் திறனாளிகள்

ஆதார் அட்டை இல்லாததால் தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் பராமரிப்புத் தொகை கடந்த இரு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதிலும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
சமையல் எரிவாயு மானியம், வங்கிக் கணக்கு, பான் அட்டை, காப்பீடு போன்ற அனைத்துக்கும் 12 இலக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, ஓய்வூதியம் பெறுதல், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை இன்றியமையாதது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் ஆதார் அட்டை பெற அரசு சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இ}சேவை மையங்களும் உருவாக்கப்பட்டு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதிலும் பார்வைக் குறைபாடு, உடல் ஊனம், வாய் பேசமுடியாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள 1.25 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் ரூ. 1,500 பராமரிப்புத் தொகையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவையில் 70 சதவீதம் பேருக்கு ஆதார் இல்லை:
கோவை மாவட்டத்தில் கடுமையாக ஊனமுற்றோர் 545 பேர், மனவளர்ச்சி குன்றியவர்கள் 3,935 பேர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 66 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாதந்தோறும் பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆதார் அட்டை பெற்றுள்ளனர். ஆனால், 70 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களால் ஆதார் அட்டை பெறவில்லை. இதனால் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்கப்படவில்லை.
ஆதார் மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல்:
கடுமையாக ஊனமுற்றோருக்கு ஆதார் அட்டை எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. கை ரேகை, கருவிழி ஆகியவற்றைப் பதிவு செய்வதில் அவர்களுக்குப் பெரும் சிரமம் உள்ளது. மேலும், பலரை ஆதார் மையங்களுக்கு அழைத்துச் செல்வது, நீண்ட வரிசையில் நிற்க வைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக பெரும்பாலான மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் அட்டை இல்லாமல் உள்ளது.
எனவே, கடும் ஊனமுற்றோருக்கு ஆதார் அட்டை பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதுடன், வழங்கப்படாமல் உள்ள பராமரிப்புத் தொகையையும் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான கே.ராமச்சந்திரன் (87) கூறியதாவது:
எனது மகள் 3 வயதாக இருக்கும்போதே கடுமையான மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதன்பின் வலிப்பு நோயின் தாக்கத்தால் ஞாபாக சக்தியை இழந்து விட்டார். தற்போது அவருக்கு 58 வயதாகிறது. அவரால் துணை இல்லாமல் எந்தச் செயலையும் மேற்கொள்ள இயலாது.
எங்களுக்கு மாநில அரசு சார்பில் மாதந்தோறும் கடுமையான ஊனமுற்றோருக்கான பராமரிப்புத் தொகை ரூ. 1,500 எனது மகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஒரு வாரம் ஆகியும் ஆகஸ்ட் மாதத்துக்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது உங்கள் மகளுக்கு ஆதார் அட்டை எண் இருந்தால் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்துக்கு சென்று கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. உடனடியாக ஆதார் அட்டை பெற்று அதை வங்கியில் சமர்ப்பிக்கச் சொல்கின்றனர். ஆனால், நடக்க முடியாத, வாய் பேசமுடியாத, மன வளர்ச்சி இல்லாத நிலையில் உள்ள எனது மகளை எவ்வாறு ஆதார் மையத்துக்கு அழைத்துச் செல்வது, பயோ மெட்ரிக் முறையில் ஆதார் அட்டைக்காக எப்படி விண்ணப்பிக்க இயலும் என்று கேள்வி எழுப்புகிறார்.
இதுகுறித்து, கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகையானது மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலங்கள் மூலமாக அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது.
அதன்பின், அவர்கள் வங்கிக்குச் சென்றோ அல்லது ஏடிஎம் அட்டை மூலமாகவோ அந்தத் தொகையை எடுத்துக் கொள்கின்றனர். இந்த நிலையில், தற்போது வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஆதார் அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மைதான்.
நாங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பணத்தை அனுப்பினாலும் ஆதார் அட்டையைக் காரணம் காட்டி மாற்றுத் திறனாளிகளுக்குப் பணம் வழங்க வங்கிகள் மறுத்து விடுகின்றன. இதனால் பராமரிப்புத் தொகை மீண்டும் கருவூலத்துக்கே வந்துவிடுகிறது. இதுகுறித்து பல மாற்றுத் திறனாளிகள் எங்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசின் உத்தரவு என்பதால் எங்களால் எதுவும் செய்யமுடிவதில்லை என்கின்றனர்.
அரசு கணக்கீடு நடத்தாதது ஏன்?
ஆதார் அட்டையால் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அரசு ஏன் இதுவரை கணக்கீடு நடத்தவில்லை ? மேலும், ஆதாரை காரணம் காட்டி மாதாந்திரப் பராமரிப்புத் தொகையை வழங்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு முன்வராதது ஏன் என்ற கேள்வியையும் மாற்றுத் திறனாளிகள் எழுப்புகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு
விலக்கு அளிக்கப்படுமா?
இந்தப் பிரச்னையால் தமிழகம் முழுவதிலும் 1.25 லட்சம் மாற்றுத் திறனாளிகளில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் அட்டை பெறுவதில் இருந்து மத்திய, மாநில அரசு விலக்கு அளிப்பதுடன், அவர்களுக்கு வழங்காமல் உள்ள மாதாந்திர பராமரிப்புத் தொகையையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயலாதோரின் கோரிக்கையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com