உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகத்துக்கு முதலிடம்

இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார்.

இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உடல் உறுப்புகள் தான தின விழாவில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து, தொடர்ந்து இரு ஆண்டுகளாக சாதனை நிகழ்த்தி இருக்கும் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.
இக்கட்டான சூழ்நிலையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் உடல் உறுப்புகளைத் தானம் வழங்கி, பிற உயிர்களைக் காப்பாற்றி உதவும் குடும்பத்தினரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தியாவில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம். ஆனால் உடல் உறுப்பு தானம் மூலம் 6 ஆயிரம் சிறுநீரகங்கள் தான் பெற முடிகிறது. கல்லீரல், இதயம் உள்ளிட்ட இதர அவயங்களின் தேவையும் இதே நிலையில்தான் உள்ளன.

சென்னை ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மருத்துவர் என். மதுசங்கருக்கு விருது வழங்குகிறறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன் (இடமிருந்து) உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத்துறை இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா,தேசிய உடல் உறுப்பு மாற்று சிகிச்சை நிறுவன இயக்குநர் விமல் பண்டாரி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரம் பேர். விபத்தில் சிக்கி உயிர்பிழைக்க இயலாமல் மூளைச்சாவு அடையும் ஒருவரிடமிருந்து இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர். இந்திய அளவில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட 78 மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் சிறப்பாகச் செயல்பட உறுதுணையாகத் திகழ்ந்து வரும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், இதர மருத்துவ ஒருங்கிணைப்பாளர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் பல உயிர்களைக் காக்க முடியும் என்றார் அவர்.
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: தமிழ்நாட்டில் இதுவரை 1008 உடல் உறுப்பு தான நன்கொடையாளர்களிடம் இருந்து 5,655 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வரின் உயிர்காக்கும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.35 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம்,உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் இதர மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது என்றார்.
பேராசிரியர் முகமது ரேலா: குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு உலக அளவில் முதலிடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாகி இருப்பதும் திட்டம் வெற்றி பெற முக்கிய காரணங்களாகும். தமிழகமெங்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார்.
விழாவில் உடல் உறுப்பு தானம் வழங்கிய குடும்பத்தினர் கெüரவிக்கப்பட்டனர்.
அதிக எண்ணிக்கையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மத்திய சுகாதாரச் சேவை இயக்குநர் ஜெகதீஷ் பிரசாத், தமிழ்நாடு உடல் உறுப்புகள் மாற்றுத் திட்ட உறுப்பினர் செயலர் பி.பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் செலினா பரிமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com