"சமூக மாற்றத்துக்கான மன உந்துதலை இலக்காகக் கொள்ள வேண்டும்'

சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் மன உந்துததலையே மாணவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என தமிழில் தேர்வெழுதி வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ். சாதனையாளர் ஆ.மணிகண்டன் கூறினார்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் மன உந்துததலையே மாணவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என தமிழில் தேர்வெழுதி வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ். சாதனையாளர் ஆ.மணிகண்டன் கூறினார்.

கும்மிடிப்பூண்டி, சொந்தம் கல்விச்சோலை போட்டித் தேர்வுகள் பயிற்சி சேவை மையத்தின் 6 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையேற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் ஏ.எம்.காசி விசுவநாதன் முன்னிலை வகித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வெழுதி வெற்றி பெற்ற ஆ.மணிகண்டன், அ.குலோத்துங்கன் ஆகியோர் மாணவர்களுக்கு நம்பிக்கையுரை வழங்கினர். விழாவில், பல்வேறு போட்டித்தேர்வுகளை எழுதி, அரசுப்பணியில் சேர்ந்துள்ள சொந்தம் கல்விச்சோலை மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்துப் பாராட்டினர்.
விழாவில், ஆ.மணிகண்டன் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் கிராமமொன்றில் தமிழ் வழியில் கல்வி பயின்றேன். பல முறை ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வெழுதி தோல்வியுற்றேன். இருப்பினும், மனம் தளராமல் அதுவும் தமிழில் தேர்வெழுதி கடந்தாண்டு வெற்றி பெற்றேன். இதன்மூலம், வரும் காலங்களில் அடித்தட்டு மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்று நம்புகிறேன்.
கிராமப்புற மாணவர்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மன உறுதி, கடின உழைப்பு ஆகிய நான்கு விஷயங்களில் உறுதியுடன் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். எப்போதும், தோல்வி அனுபவங்கள்தான் வெற்றி பெற உதவும். எனவே, இலக்கை அடையும் வரை போராட கற்றுக்கொள்ள வேண்டும். முடியும் வரை போராடுவதுதான் விடாமுயற்சி. முடிந்தவரை அல்ல.
வறுமை, அறியாமை போன்ற பிணிகளுக்கு கல்வியே சிறந்த சமூக மருந்து. போட்டித்தேர்வுகளுக்கு பள்ளி புத்தகங்களே அடிப்படையானது.
மாணவர்கள் சமூக மாற்றுத்துக்கான மன உந்துதலை இலக்காகக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விழாவை, சொந்தம் கல்விச்சோலை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். முகுந்தன், கவிஞர் தமிழ் மணவாளன், என்.ஆர். ரகு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சொந்தம் கல்விச்சோலை அமைவிடத்தை வழங்கிய எம்.சேகர், பயிற்றுநர்கள் எம்.ரகுநாதன், எஸ்.சூரவேல், ஆர்.டில்லிபாய் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். இதில், மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com