சுற்றுச்சூழலை பாதுகாக்க விரைவில் மின்சாரப் பேருந்துகள்

சென்னையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் விரைவில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க விரைவில் மின்சாரப் பேருந்துகள்

சென்னையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் விரைவில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக குளிர்சாதன வசதியுடன் கூடிய 2000 மின்சார பேருந்துகளும் மற்றும் 100 சிற்றுந்துகளும் வாங்க திட்டமிட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுச் சூழலுக்கு மாற்றாக...: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 905 வழித்தடங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் பெரும்பாலனவை காலாவதியான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், சாலையில் இப்பேருந்துகள் இயங்கும் போது அதிகமாக புகை கக்கிச் செல்கின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. தற்போது, இப்பேருந்துகளை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே புதிய முயற்சியாக விரைவில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
2,100 மின்சார பேருந்துகள்: முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருந்துகளும், 100 மின்சார சிற்றுந்துகளும் வாங்கும் நடவடிக்கைகளில் மாநகர போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்சார பேருந்துகளில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இரைச்சலின்றி..: இந்தப் பேருந்து குறித்து மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
தற்போது இயங்கும் பேருந்துகளில் இரைச்சல் அதிகமாக இருக்கும். இது பயணிகளுக்கு ஒரு வகையான எரிச்சலையும் இடையூறையும் ஏற்படுத்தும். ஆனால், மின்சார பேருந்துகள் இயந்திர இரைச்சலின்றி செல்லும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால், இவ்வகை பேருந்தில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புவார்கள். சென்னையில் முதன் முதலாக இவ்வகை பேருந்துகள் அறிமுகம் செய்து விரைவில் இயக்கப்பட இருக்கிறது. இதற்கு பொதுமக்களிடையே இருக்கும் வரவேற்பை பொருத்து படிப்படியாக மற்ற போக்குவரத்துக் கழங்களுக்கும் விரிவு படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


சிறப்பு அம்சம் என்ன?

சென்னை மாநகருக்கு என தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகள் பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எரிபொருள் டேங்குக்கு பதிலாக மின்கலமான பேட்டரி இடம் பெற்று இருக்கும். இதில் புகை, ஓலி மாசு என எவுதும் இருக்காது. இப்பேருந்து இயக்கப்படும் தூரத்திற்கு, சாதாரண பேருந்துகளை இயக்கினால் எரிபொருள் 40 லிட்டர் டீசல் தேவைப்படும். இதில், பேட்டரி ரீசார்ஜ் செய்வதற்கு பாதியளவுதான் செலவாகும். மேலும், இப்பேருந்தில் வழிகாட்டும் ஜி.பி.எஸ். கருவி, தானாக இயங்கும் கதவு மற்றும் கியர், தீயணைப்பான் கருவி, முதலுதவி மருந்துப் பெட்டி, கண்காணிப்பு கேமரா ஆகியவையும் பொருத்தப்பட்டிருக்கும். இப்பேருந்தில் மொத்தம் 26 பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பேட்டரி மின்கலத்தில் 3 மணிநேரம் சார்ஜ் ஏற்றம் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை இயங்கும் என அரசு மாநகர போக்குவரத்துக் கழக பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com