ஜிஎஸ்டியால் ரூ.1 லட்சம் வரை கூடுதல் செலவு: முடங்கியது லாரி கூண்டு கட்டும் தொழில்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக லாரி கூண்டு கட்ட ரூ.1 லட்சம் வரை கூடுதல் செலவு ஏற்படுவதால், கடந்த ஒரு மாதத்தில் கூண்டு கட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
ஜிஎஸ்டியால் ரூ.1 லட்சம் வரை கூடுதல் செலவு: முடங்கியது லாரி கூண்டு கட்டும் தொழில்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக லாரி கூண்டு கட்ட ரூ.1 லட்சம் வரை கூடுதல் செலவு ஏற்படுவதால், கடந்த ஒரு மாதத்தில் கூண்டு கட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மாதம்தோறும் 500 லாரிகள் வரும் இடத்தில் இப்போது 50 லாரிகள் கூட வருதில்லை என்கின்றனர் லாரி கூண்டு கட்டும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.

திண்டுக்கல்லுக்கு பூட்டு, திருப்பாச்சிக்கு அரிவாள், சேலத்துக்கு இரும்பு என்ற வரிசையில் நாமக்கல்லுக்கு உலகம் போற்றும் தொழிலாக விளங்கியது லாரி கூண்டு கட்டும் தொழில். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் சிறிய பட்டறைகளாகத் தொடங்கிய இந்த தொழிலானது, பரந்து விரிந்து நாடு முழுவதும் பறை சாற்றும் தொழிலாக வளர்ந்துள்ளது.
நாடு முழுவதும் சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை வடிவமைத்துத் தருவதில் நாமக்கல் லாரி கூண்டு கட்டும் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தற்போது இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் சரக்கு வாகனங்களில் 60 சதத்துக்கும் அதிகமான வாகனங்கள் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பணிமனைகளில் உருவம் பெற்றவையே. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லாரி கூண்டு கட்டும் தொழில் இருந்தாலும், தொழிலுக்கு பெயரையும், பெருமையையும் பெற்றுத் தந்தது நாமக்கல் மட்டுமே.
லாரி கூண்டு கட்டும் தொழிற்பேட்டை: நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1,000}க்கும் மேற்பட்ட லாரி கூண்டு கட்டும் தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே கனரக வாகன கூண்டு கட்டும் தொழிற்பேட்டையை அரசு அமைத்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து லாரி கூண்டு கட்டும் தொழிலகங்களையும் இங்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மின்தடை, மூலப் பொருள்கள் விலையேற்றம், தொழில் கூடங்கள் பெருக்கம் என பல்வேறு இடையூறுகள் இருந்தாலும், நாடு முழுவதும் இருந்து நாமக்கல்லுக்கு வந்து லாரி கூண்டு கட்டிச் செல்வதில் எந்த சுணக்கமும் இருந்ததில்லை. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஒரு மாதமாக லாரி கூண்டு கட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கிவிட்டது.
10 சதவீத சேஸ் கூட வரவில் லை: இதுகுறித்து நாமக்கல் வட்டார லாரி பாடி பில்டிங் சங்கத் தலைவர் எம்.புகழேந்திரன் தெரிவித்தது: நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு வட்டாரங்களில் சுமார் 1,000 லாரி கூண்டு கட்டும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு குடிசைத் தொழில் போன்று செயல்பட்ட இந்த தொழில் நிறுவனங்கள், தற்போது சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு முடங்கிக் கிடக்கின்றன.
ஜிஎஸ்டியால் ரூ.1 லட்சம் கூடுதல் செலவு: மரம், இரும்பு, கண்ணாடி, பிளைவுட் போன்ற உதிரி பாகங்களை கடைகளில் வாங்கித்தான் கூண்டு கட்டும் தொழிலைச் செய்து வருகிறோம். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தப் பொருள்களுக்கு 28 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், ஜாப் ஒர்க் முறையான கண்ணாடி வடிமைப்பு, இரும்பு வேலைகள் ஆகியவற்றுக்கு அளிக்கும் கூலிக்கும் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூலப் பொருள்கள் விலை மற்றும் ஜாப் ஒர்க் கூலி உயர்ந்துள்ளதால், ரூ.3 லட்சமாக இருந்த லாரி கூண்டு கட்டும் செலவு, இப்போது ரூ.4 முதல் ரூ.4.25 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக புதிய லாரிகள்(சேஸ்) வருவது முற்றிலுமாக நின்று விட்டது. வழக்கமாக மாதம் 500 முதல் 600 சேஸ்கள் வரை வரும். ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் மாவட்டம் முழுவதும் 50}க்கும் குறைவான சேஸ்களே வந்துள்ளன.
இதனால் லாரி கூண்டு கட்டும் தொழில் முழுவதுமாக முடங்கிக் கிடக்கின்றன.
கார்ப்பரரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயற்சி: லாரி தயாரிப்பு நிறுவனங்கள், சில ஆண்டுகளாக கூண்டு கட்டும் தொழிலையும் செய்து வருகின்றன. சில ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் முற்றிலுமாக இயந்திரங்கள் மூலம் கூண்டு கட்டும் தொழிலை இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன. மேலும், மோட்டார் வாகன ஆராய்ச்சி நிறுவனம் (அராய்) பரிந்துரைத்துள்ள வடிவமைப்பில் மட்டுமே வாகனங்களைத் தயாரிக்க வேண்டும். மேலும் அராய் சான்று அளித்துள்ள நிறுவனங்களில் மட்டுமே கூண்டு கட்ட வேண்டும். அப்போது தான், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லாரியைப் பதிவு செய்ய முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்ட தொழில் அடையாளமாக உள்ள லாரி கூண்டு கட்டும் தொழிலைப் பாதுகாத்திட, இதற்கான உதிரி பாகங்கள் அனைத்துக்கும் 10 சதவீதம் வரை மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிப்பு இருக்க வேண்டும். மேலும், லாரி கூண்டு கட்டும் நிறுவனங்கள் அராய் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com