நீட் தேர்வு: மத்திய அரசு தாமதப்படுத்துவது ஏன்?

நீட் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு ஏன் தாமதப்படுத்துகிறது எனத் தெரியவில்லை என்றார் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன்.

நீட் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு ஏன் தாமதப்படுத்துகிறது எனத் தெரியவில்லை என்றார் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியர் வீரசந்தனம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது படத்தைத் திறந்து வைத்த நடராசன் பின்னர் தெரிவித்தது:
நீட் தேர்வு பிரச்னையில் மத்திய அரசு ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறது எனத் தெரியவில்லை. இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் அதிகளவில் உள்கட்டமைப்பை உருவாக்கியிருப்பது தமிழ்நாடும், கர்நாடகமும்தான். இந்த இடத்தை வடக்கில் இருந்து வரும் மாணவர்களுக்குக் கொடுப்பதால் நம்முடைய உரிமை பறிபோகிறது. இதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராடாமல், தனித்தனியாகப் பேசுவதால்தான் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் இருந்து படிப்பதற்காக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக காமராசரும், எம்.ஜி.ஆரும் இவ்வளவு பள்ளி, கல்லூரிகளை உருவாக்கினர்.
நாம் கஷ்டப்பட்டு, நம்முடைய பொருளாதாரத்தை வைத்து, தமிழர்களின் உழைப்பால் உருவான அந்த இடங்களை நீட் தேர்வு அடிப்படையில் வட மாநிலத்தினர் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது. இது தமிழர்களின் தன்மானப் பிரச்னை. இதற்கு மத்திய அரசு முடிவு காண வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரியளவில் போராட்டம் நிகழும். இதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ்நாட்டின் ஓவியத்தில் சிறந்த நிலையை எட்டியவர் ஓவியர் வீரசந்தனம். அவர் முள்ளிவாய்க்கால் அவலங்களைச் சித்தரிக்கும்விதமாக மிக அருமையான ஓவியங்களைத் தீட்டித் தர, அதை சிற்பிகள் செதுக்கித் தந்ததைத் தொடர்ந்து, இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலின் நீண்ட கால வரலாற்றையும் ஈழப் பிரச்னையையும் ஆயிரம் ஆண்டுகளானாலும் தமிழர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் விதமாகச் செய்தவர் வீரசந்தனம். அவர் அண்மையில் மறைந்துவிட்டார். அவரது புகழைப் பாராட்டும் விதமாக அவருடைய படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தொடர்பாக இப்போது எதுவும் பேச விரும்பவில்லை. சரியான நேரத்தில் சரியாகச் சொல்வேன், காத்திருங்கள் என்றார் நடராசன்.
கவிஞர் காசி ஆனந்தன் தலைமை வகித்தார். முகில்களின் மீது நெருப்பு என்ற நூலை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட, அதை திரைப்பட இயக்குநர் தரணி, வீரசந்தனத்தின் மகள் சங்கீதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com