மருத்துவப் படிப்பில் மத்திய அரசின் தலையீடு கேள்விக்குறியாகும் தமிழகத்தின் சுகாதாரம்?

சென்னை, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவையில் பெரும் பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மருத்துவப் படிப்பில் மத்திய அரசின் தலையீடு கேள்விக்குறியாகும் தமிழகத்தின் சுகாதாரம்?

சென்னை, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவையில் பெரும் பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலை நீடித்தால் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, ஏழை எளிய மக்களும் மருத்துவச் சேவைக்கு தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்னிலை வகிக்கும் தமிழகம்: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த 48 மருத்துவமனைகள், 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் 274, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,747, துணை சுகாதார நிலையங்கள் 8,706, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 476 உள்ளன. இதுதவிர 1491 இந்திய முறை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளன.
சுகாதாரத் துறையைப் பொருத்தவரை முன்னணி மாநிலங்களின் வரிசையில் தமிழகத்துக்கும் இடம் உண்டு. பச்சிளங்குழந்தை இறப்பு, பிரசவத்தில் தாய் உயிரிழப்பு, உடல்உறுப்பு தானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக எட்ட முடியாத குறியீடுகளைக் கூட தமிழகம் எளிதாக எட்டியுள்ளது. இதனால் மத்திய அரசு, அந்நிய நிதியுதவியுடன் கூடிய பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் வரை அரசின் இலவச மருத்துவ சேவை எட்டியதுதான்.
உரிமைகள் பறிப்பு: இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளால் தற்போது அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் சூழல் உள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்ததால், உச்சநீதிமன்றம் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை. ஆனால் அடுத்த கல்வியாண்டில் முதுநிலை மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவது சிரமமே.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள்: நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில் 192 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு, மீதம் 50 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்த பிற மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, வெளிமாநில மாணவர்களும் படிக்கும் வகையில் 50 சதவீத இடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. மீதம் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும் இந்தப் படிப்பைப் படிக்கும் அரசு மருத்துவர்கள் தங்கள் சேவைக்காலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளிலேயே பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு 100 சதவீத இடங்களையும் நீட் தேர்வின் அடிப்படையில் மத்திய அரசு நிரப்புகிறது. இதனால் தமிழகத்தில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்பை படிப்போர் மீண்டும் தமிழகத்திலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவே.
எம்.பி.பி.எஸ் இடங்கள் பறிபோகுமா?: முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முதலில் 25 சதவீத இடங்கள் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் 50 சதவீத இடங்களை அளிக்க வேண்டிய நிலை வந்தது. இதே நிலை எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் வரலாம். தற்போது எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் 15 சதவீத இடம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இதிலும் மத்திய அரசு தலையிட்டு அதிக இடங்களை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவக் கல்வியின் பின்னால் அரசியல்: மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழக அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள்பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் கிராமப்புறங்களிலும் தங்கள் கிளைகளைப் பரப்பும். இதனால் ஏழை எளிய மக்கள் கூட கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும்.
மக்களின் வரிப்பணம்: தமிழகத்தைப் பொருத்தவரை மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளை மேம்படுத்த இந்த நிதியாண்டில் சுமார் ரூ.752.90 கோடி செலவிடப்படுகிறது. இதில் கரூரில் தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கான ரூ.229.48 கோடியும் அடங்கும். இந்த ஒதுக்கீட்டில் மத்திய அரசு மற்றும் ஜப்பான் பன்னாட்டு முகமையின் கீழ் சில கோடிகளைப் பெற்றாலும், பெரும்பாலான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்து வழங்குகிறது.
முழுக்க முழுக்க தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கும், அரசு மருத்துவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் வழங்குவதுதான் நியாயம். அப்போதுதான் தன்னலமில்லாத மருத்துவர்களின் மருத்துவச் சேவையும் ஏழை, எளிய மக்களைச் சென்றடையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவக் கல்வியில் தனித்துவமிக்க ஆந்திரம்!

ஆந்திர மாநிலத்தில் சுமார் 4,500 மருத்துவ இடங்கள் உள்ளன. அங்கு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தொலைநோக்குப் பார்வையோடு 1950}களிலேயே ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, ஆந்திரத்தில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களும் 100 சதவீதம் மாநில ஒதுக்கீட்டுக்கே. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு எந்த இடங்களும் வழங்கப்படாது.
ஆந்திர மாணவர்களும் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கையின் அகில இந்திய இடங்களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. ஆந்திரத்தில் பிறந்து வேறு மாநிலத்தில் வசிக்கும் மாணவர்கள் பிற மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இருப்பினும் 100 சதவீத இடங்களும் மாநில மாணவர்களுக்கே அளிக்கப்படும். இதனால் அந்த மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை.
இதே முறையை தமிழகத்திலும் பின்பற்ற நடவடிக்கைகள் எடுத்தால் எதிர்காலத்தில் கூட பிரச்னை ஏற்படாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தீர்வு என்ன?

முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, முதுநிலை மருத்துவம், முதுநிலை டிப்ளமோ, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளில் திருத்தம் கொண்டு வர மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக தெளிவான முடிவு தெரிந்த உடன், அதில் மாநிலத்தின் உரிமையைப் பாதுகாக்கும் வகையிலான மாற்றங்களைக் கொண்டு வருவதில் அக்கறை காட்ட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com