கட்டண விவரம் வராததால் தவிப்புக்குள்ளாகும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்!

செல்லிடப்பேசி மாதந்திர கட்டண விவரம் வராததால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கட்டண விவரம் வராததால் தவிப்புக்குள்ளாகும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்!

செல்லிடப்பேசி மாதந்திர கட்டண விவரம் வராததால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பிஎஸ்என்எல் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தொலைத் தொடர்பு சேவையை அளித்து வருகிறது. இதில், செல்லிடப்பேசி, தொலைபேசி, அகண்ட அலைவரிசை திட்டங்களில் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகின்றனர்.
2 வாரங்களாக எதிர்பார்க்கும்..: தொலைபேசி, செல்லிடப்பேசி, அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்கள் மாதாந்திர திட்டங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, மாதாந்திர செல்லிடப்பேசி திட்டங்களின் கட்டண விவரத்தை மாதந்தோறும் முதல் 5 நாள்களுக்குள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவிடும். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணங்களை செலுத்துவது உண்டு. ஆனால், கடந்த 2 வாரங்களாக பிஎஸ்என்எல் மாதாந்திர செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் கட்டண விவரங்களை பிஎஸ்என்எல் அனுப்பவில்லை. இதனால், கட்டண விவரங்கள் ஏதும் தெரியாமல், எப்போது கட்டண விவர பில் வரும் என எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
முன்னறிவிப்பில்லை: இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அழைப்புகள் ஆகிய எந்த வழியிலும் வாடிக்கையாளர்களுக்கு முன்னறிவிக்கவில்லை. அதுபோல், சேவை மையங்களிலும் இது தொடர்பாக தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இது குறித்து பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் சக்திவேல், கோவிந்தராஜ், அகிலா உள்ளிட்டோர் கூறியதாவது: வழக்கமாக பிஎஸ்என்எல் கட்டண விவரம் மாத கடைசியில் தெரிந்துவிடும். இதில், செல்லிடப்பேசி கட்டண விவரமும் மாதந்தோறும் 2 முதல் 5 தேதிக்குள் அஞ்சல் மூலம் வந்து விடும். அதற்கேற்ப பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணத்தை செலுத்தி விடுவோம். ஆனால், இதுவரை ஜூலை மாதாந்திர செல்லிடப்பேசி கட்டண விவரம் வரவில்லை.
இது குறித்து, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கட்டண சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, எப்போது வரும் என எங்களுக்கே தெரியாது. அத்துடன், கட்டண விவர சர்வரிலும் பதிவேற்றப்படவில்லை. வேண்டுமானால் ஒரு தொகையை செலுத்தி விட்டு செல்லுங்கள். கட்டண விவரம் வருவதற்கு மேலும் சில நாள்கள் ஆகலாம் என்கின்றனர். இந்நிலையில், அழைப்பு உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுவிடுமா எனும் சந்தேகத்தில் உள்ளோம். கால தாமதமாக பில் வந்தால் கால அவகாசம் தரப்படுமா எனவும்தெரியவில்லை எனும் குழப்பத்திலும் உள்ளோம் என்றனர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு, சென்னை வட்ட அதிகாரிகள் கூறியதாவது: செல்லிடப்பேசி , தொலைபேசி , அகண்ட அலைவரிசை உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் முதல் வாரத்தில் கட்டணவிவரம் அனுப்பி விடுவோம்.
ஜிஎஸ்டியால் காலதாமதம்: ஆனால், ஜிஎஸ்டி விதிப்பு காரணமாக தொலைத்தொடர்பு சேவை கட்டண விவரங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்மூலம், திருச்சி, கோவை பிஎஸ்என்எல் நிதி அலுவலகங்களில் வாடிக்கையாளர் கட்டண விவரங்களை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
ஓரிரு நாள்களில் அனுப்பப்படும்: அதன்படி, இந்த பணிகள் ஓரிரு நாள்களில் முழுவதும் முடிந்துவிடும். அதன் பிறகு, கட்டண விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதோடு, மின்னஞ்சல், குறுஞ்செய்திஆகியவை மூலமும் தெரிவிக்கப்படும். அடுத்த மாதம் முதல் பிரச்னை இருக்காது என்றனர்.
கால அவகாசம் உறுதி
பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி மாதாந்திர கட்டண விவரம் பதிவேற்றும் பணிகள் முடிந்தவுடன், சர்வரில் பதிவேற்றம் செய்யப்படும். இதையடுத்து, அனைத்து விவரங்களையும்
ஆய்வு செய்த பின்னரே வாடிக்கையாளர்களுக்கு கட்டண பில் விவரம் அனுப்பப்படும்.
இத்தகைய அசௌகரிய சூழல் காரணமாக, கடந்த மாதத்துக்குரிய கட்டண விவரத்தை அனுப்பியதிலிருந்து 15 நாள்கள் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். எந்தச் சேவையும் வாடிக்கையாளர்களுக்கு நிறுத்தப்படாது.
எனவே, செல்லிடப்பேசி கட்டண விவரம் கிடைத்தவுடனேயே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம் என பிஎஸ்என்எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com