பெங்களூரில் மழை: 127 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகபட்சம்

பெங்களூரில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கின. பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
பெங்களூரில் மழை: 127 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகபட்சம்


பெங்களூரு: பெங்களூரில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

திங்கட்கிழமை நள்ளிரவில் கொட்டத் தொடங்கி அதிகாலை வரை அதாவது 4 மணி நேரத்தில் 143.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகருக்குக் கிடைக்கும் மொத்த மழை அளவைவிட ஒரே நாளில் பெய்திருக்கும் இந்த மழையின் அளவு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

கன மழை காரணமாக பல பள்ளிகளில் சுதந்தர தின விழாக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மாலையிலும் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியதில், வெள்ள நீரில் பல வாகனங்கள் மூழ்கின. 

இந்த நிலையில், புதன்கிழமை முதல் அடுத்த 3 நாட்களுக்கு பெங்களூருவில் கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், திங்கட்கிழமை நள்ளிரவில் பெய்திருக்கும் மழை அளவானது, ஒரு நாளில் பெய்த மழை அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடைசியாக 2009ம் ஆண்டு ஒரே நாளில் பெங்களூருவில் 77 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதே சமயம், வரலாற்றில், 1890ம் ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 166 மி.மீ. மழை பெய்திருப்பதே இதுவரை அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு கடந்த 127 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திங்கட்கிழமை ஒரே நாளில் 143.8 மி.மீ. மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பெங்களூரு குமாரசாமி லேஅவுட், எச்.எஸ்.ஆர் லேஅவுட், வில்சன்கார்டன் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்ததால், கீழ்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் உள்ள வாகனங்கள் நீரில் மூழ்கின.

ஜே.பி.நகர், ஜெயமஹால் பகுதிகளில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புப் படையினர் சாலையில் விழுந்திருந்த மரத்தை அகற்றி, போக்குவரத்தை சரி செய்தனர். கே.ஆர்.புரம், சாந்திநகர், கோரமங்களா, ஈஜிப்புரா, சாந்திநகர், வில்சன்கார்டன், ஜே.பி.நகர், ஓக்கலிப்புரம் பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளில் மழை வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின.

கோரமங்களாவில் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை படகுகள் மூலம் தேசிய பேரழிவு மீட்புப் படையினர் மீட்டனர். செவ்வாய்க்கிழமை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மேயர் ஜி.பத்மாவதி உள்ளிட்டோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட  மக்களுக்கு ஆறுதல் கூறினர். மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com