முடங்கிக் கிடக்கும் உயர் கல்வி மன்றம்: தடைபட்டு நிற்கும் திட்டங்கள்

தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால், மன்றத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு திட்டங்கள் முடங்கிப் போயிருப்பதாக பேராசிரியர்களும்,

தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால், மன்றத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு திட்டங்கள் முடங்கிப் போயிருப்பதாக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதிய திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளை மேற்கொள்ள 1992 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் உயர் கல்வி மன்றம். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர் கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகளில் சேரும் மாணவர்களை, கல்லூரி பேராசிரியர் பணித் தேர்வின்போது ஆசிரியர் தேர்வு வாரியமே (டிஆர்பி) புறக்கணித்தது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தை உருவாக்கும் பணி இந்த மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனத்தில் ஒரு பருவம் அதாவது 6 மாதங்கள் படிக்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்காக மாணவர் ஒருவருக்கு ரூ. 15 லட்சத்தை செலவு செய்தது. உயர் கல்வி மன்றம் மூலமாக கடந்த 2013 -14 கல்வியாண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வாறு உயர் கல்வியில், தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் முக்கிய பங்காற்ற வேண்டிய நிலையில், உயர் கல்வி மன்றத்தின் முக்கியப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் முடங்கிப் போயிருப்பதாக பேராசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மன்றத்தின் துணைத் தலைவர் பணியிடம் கடந்த 4 ஆண்டுகளாகவும், உறுப்பினர் செயலர் பணியிடம் 2 ஆண்டுகளாகவும் நிரப்பப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற முன்னாள் பொதுச் செயலாளர் சிவராமன் கூறியது:
ஏழை மாணவர்கள், வெளிநாடு சென்று அங்குள்ள சிறந்த கல்வி நிறுவனத்தில் 6 மாதங்கள் படித்து அந்நாட்டு கலாசாரம், மக்களின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வகையிலான சிறந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வந்தது. ஆண்டுக்கு 25 மாணவர்கள், 5 பேராசிரியர்கள் வெளிநாடு அனுப்பப்பட்டனர்.
ஆனால், உயர் கல்வி மன்றம் முடங்கிக் கிடப்பதால், 2016-17 கல்வியாண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது.
இதுபோல், நூறு சதவீத பணிகள் முடிவடைந்துவிட்ட 'ஒருங்கிணைந்த பாடத் திட்டம்', அரசுக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் திட்டம், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் திட்டம் என அனைத்துத் திட்டங்களும் முடங்கிப் போயுள்ளன.
எனவே, மாநில உயர் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, மன்றத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com