இரு அணிகள் இணைப்புக்காக எடுக்கப்பட்டதா முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்புகள்?

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்; வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
இரு அணிகள் இணைப்புக்காக எடுக்கப்பட்டதா முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்புகள்?


சென்னை: தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்; வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி இரண்டு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியினர், இணைவதற்காக வைத்த இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் ஏற்று, முதல்வர் பழனிசாமி இன்று இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி அறிவித்த முதல் அறிவிப்பில், தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 5.12.2016 அன்று தன் இன்னுயிரை நீத்தார்கள்.

பல்வேறு அமைப்புகள் மற்றும் தரப்பினரிடமிருந்தும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் உள்ளன.

எனவே, ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மற்றொரு அறிவிப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆறு முறை திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட உன்னத தலைவராய் ஜெயலலிதா அவர்கள் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்', இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

ஜெயலலிதாவின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம், அவர்கள் வாழ்ந்த, சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள, 'வேதா நிலையம்' அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து பல்வேறு விதமான கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com