ஒகேனக்கல்லில் செந்நிறத்தில் கொட்டும் தண்ணீர்

காவிரி ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் அருவியில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள நீர் கலந்து செந்நிறத்தில் சீறிப் பாயும் தண்ணீர்
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள நீர் கலந்து செந்நிறத்தில் சீறிப் பாயும் தண்ணீர்

காவிரி ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் அருவியில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், பரிசல் இயக்க 2-ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தின், காவிரி ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளநீர் கலந்து செந்நிறத்தில் கொட்டுகிறது. தொடர்மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை திடீரென அருவிக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 11,500 கன அடியாக அதிகரித்தது.
இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து புதன்கிழமை நொடிக்கு 15,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேலும், ஆற்றுநீருடன் மழைநீர் கலந்து வருவதால், சேறும் சகதியும் கலந்து செந்நிறத்தில் ஐவர் பாணி, சினி அருவி, மினி அருவி, பிரதான அருவி ஆகிய இடங்களில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தடை நீட்டிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், ஆற்றில் நீரின் வேகம் கூடுதலாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை பரிசலில் அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம்: தமிழகப் பகுதிகளில் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு சில பரிசல் ஓட்டிகள் ஆட்டோக்களில் பரிசலைக் கொண்டு சென்று, கர்நாடக பகுதியில் உள்ள ஆலம்பாடி ஆற்றுப் பகுதியில், சுற்றுலாப் பயணிகளைப் பரிசலில் சவாரி அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஒகேனக்கல் பரிசல் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்ற இக் கூட்டத்தில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், பயணிகளின் பாதுகாப்புக் கருதி, தாற்காலிகமாக பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இத் தடையை மீறி, ஆற்றின் வேறு பகுதிக்குப் பரிசலைக் கொண்டு சென்று இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அருவியில் அதிகரித்து வரும் நீர்வரத்தை பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com