ஒற்றுமையை வலியுறுத்தி முதல்வர் கூறிய குட்டிக்கதை: குழப்பத்தில் தொண்டர்கள்

கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதையில், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று புரியாமல் தொண்டர்கள் குழப்பம் ஏற்பட்டது.
ஒற்றுமையை வலியுறுத்தி முதல்வர் கூறிய குட்டிக்கதை: குழப்பத்தில் தொண்டர்கள்

கடலூர்: கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதையில், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று புரியாமல் தொண்டர்கள் குழப்பம் ஏற்பட்டது.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, எம்.ஜி.ஆரின் உருவப் படத்தைத் திறந்துவைத்து, 41,608 பயனாளிகளுக்கு ரூ. 212.63 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். ரூ. 312.13 கோடியில் முடிவுற்ற 322 பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 50 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவர் பேசுகையில் ஒரு குட்டிக்கதை சொன்னார்.

அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்திக் கூறிய குட்டிக் கதை: ஒரு காட்டில் இருந்த ஆலமரம், நிழலைத் தேடி தன்னிடம் வருபவர்களிடம் தனது பெருமையைக் கூறிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் தனது நிழலில் வந்தமர்ந்த முனிவரிடம், தான் இந்தக் காட்டிலேயே பெரிய ஆள். அனைவரையும் விட சக்தி மிகுந்தவன் என்று கூறியது. அதற்கு முனிவர், 'காற்றைவிட பெரிய ஆளா நீ?' என்று கேட்டபோது, 'ஆம்' என்ற ஆலமரம் 'காற்றை வேண்டுமானால் என்னுடன் மோதிப் பார்க்கச் சொல்லுங்கள்' என்றது.
 
இதை முனிவர் காற்றிடம் சொல்வதாகக் கூறிச் சென்றார். பயந்து போன ஆலமரம், காற்று புயலாக வீசினால் நாம் தாங்கமாட்டோம் என்று நினைத்துக் கொண்டு, தனது மரக்கிளைகளை, கனிகளை உதிர்த்துவிட்டு மொட்டை மரமாக நின்றது. அப்போது, அங்கு வந்த காற்று 'நான் புயலாக வந்தால் என்ன நடக்குமோ அதை நீயே செய்து விட்டாய். உன் ஆணவத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டது' என்று கூறியது. மேலும், 'ஆணவத்தைக் கைவிட்டு, நல்ல நண்பனாக மாறினால் நானும் தென்றலாக வீசுவேன். இதுதான் காட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை என்றது. இதனைக் கட்சித் தொண்டர்கள் மனதில் கொண்டு ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இதில் ஆலமரம் என்று அவர் டிடிவி தினகரனைக் குறிப்பிடுகிறாரா? அல்லது ஓ. பன்னீர்செல்வத்தைக் குறிப்பிடுகிறாரா என்பது புரியாமல் தொண்டர்கள் குழம்பிப் போயினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com