நிகர்நிலைப் பல்கலை. எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆக.21-இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு ஆகஸ்ட் 21 -ஆம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு ஆகஸ்ட் 21 -ஆம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 87 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 9,661 எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 1,650 எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் மத்திய சுகாதாரச் சேவைகள் இயக்குநர் ஜெனரல் இயக்ககம் நடத்தி வருகிறது.
இந்த இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இணையதளம் மூலம் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளிலும், இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5 முதல் 7 தேதி வரையும் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவர்கள் ஆகஸ்ட் 20 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்.
இறுதிக்கட்ட கலந்தாய்வு: இரண்டாம்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் சேராமல் கைவிட்ட இடங்கள் குறித்த விவரங்கள் ஆகஸ்ட் 20 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அறிவிக்கப்படும். அப்படிக் கைவிட்ட இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும். கலந்தாய்வு முடிவுகள் ஆகஸ்ட் 24 -ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இறுதிக்கட்ட கலந்தாய்வில் மருத்துவ இடங்களைப் பெற்றவர்கள் ஆகஸ்ட் 25 முதல் 28-ஆம் தேதி வரை தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்.
இறுதியாக, காலியாக உள்ள இடங்கள் அந்தந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடம் ஆகஸ்ட் 28 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com