யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் பள்ளிகளில் படித்த மாணவர்களாகிய நாங்கள் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சூளுரைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசளிக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசளிக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ்

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் பள்ளிகளில் படித்த மாணவர்களாகிய நாங்கள் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சூளுரைத்தார்.
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, எம்.ஜி.ஆரின் உருவப் படத்தைத் திறந்துவைத்து, 41,608 பயனாளிகளுக்கு ரூ. 212.63 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். ரூ. 312.13 கோடியில் முடிவுற்ற 322 பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 50 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவர் பேசியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியலுக்கு எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சிறப்புப் பெற்ற கடலூரில் அவரின் நூற்றாண்டு விழா நடைபெறுவது கூடுதல் சிறப்பு. கடமை, பொறுமை, கருணை ஆகியவையே ஒருவரைத் தலைவராக்கும் என்று கூறியவர் எம்ஜிஆர். அவரது வழியில் அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றவர் ஜெயலலிதா.
தற்போதைய ஆட்சி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றியே நடைபெற்று வருகிறது. தன்னைவிட சக்தி மிகுந்தவர்கள் இல்லையென்று நினைப்பவர்களை இயற்கை பார்த்துக் கொள்ளும். யார் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இல்லாமல் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளை ஏன் அரசு விழாவாகக் கொண்டாடுகிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். இது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அறிவித்த திட்டம். அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். இந்த ஆட்சி நிலைக்குமா, எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று சிலர் கேட்கின்றனர்.
நாங்கள் மக்கள் பணி செய்வதற்கே அதிமுகவில் இருக்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நாங்கள். எனவே, யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம். எந்த மிரட்டலையும் முறியடிக்கும் சக்தி எங்களிடம் உள்ளது.
நான் 1974-ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்து கிளை, ஒன்றியம், மாவட்டம், மாநிலப் பொறுப்புகளைப் பெற்று, தற்போது முதல்வர் என்ற நிலையை எட்டியுள்ளேன். அதிமுகவில் உழைப்பும், விசுவாசமும் இருந்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்கு நானே உதாரணம். விவசாயியாக இருந்த நான், கோட்டையில் கொடியேற்றியதன் மூலம் விவசாயிகளுக்குப் பெருமையை ஏற்படுத்தியுள்ளேன். சிலர் பின்புற வாசல் வழியாக வந்து கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க முயற்சிக்கிறார்கள்.
அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை இந்த முயற்சி வெற்றி பெறாது. கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்றார்.
சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் விழாவுக்குத் தலைமை வகித்தார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் வளர்ச்சி, செய்தித் துறைச் செயலர் இரா.வெங்கடேசன் வரவேற்க, மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் நன்றி கூறினார்.
ஒற்றுமையை வலியுறுத்தி முதல்வர் கூறிய கதை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்திக் கூறிய குட்டிக் கதை: ஒரு காட்டில் இருந்த ஆலமரம், நிழலைத் தேடி தன்னிடம் வருபவர்களிடம் தனது பெருமையைக் கூறிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் தனது நிழலில் வந்தமர்ந்த முனிவரிடம், தான் இந்தக் காட்டிலேயே பெரிய ஆள். அனைவரையும் விட சக்தி மிகுந்தவன் என்று கூறியது. அதற்கு முனிவர், 'காற்றைவிட பெரிய ஆளா நீ?' என்று கேட்டபோது, 'ஆம்' என்ற ஆலமரம் 'காற்றை வேண்டுமானால் என்னுடன் மோதிப் பார்க்கச் சொல்லுங்கள்' என்றது.
இதை முனிவர் காற்றிடம் சொல்வதாகக் கூறிச் சென்றார். பயந்து போன ஆலமரம், காற்று புயலாக வீசினால் நாம் தாங்கமாட்டோம் என்று நினைத்துக் கொண்டு, தனது மரக்கிளைகளை, கனிகளை உதிர்த்துவிட்டு மொட்டை மரமாக நின்றது. அப்போது, அங்கு வந்த காற்று 'நான் புயலாக வந்தால் என்ன நடக்குமோ அதை நீயே செய்து விட்டாய். உன் ஆணவத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டது' என்று கூறியது. மேலும், 'ஆணவத்தைக் கைவிட்டு, நல்ல நண்பனாக மாறினால் நானும் தென்றலாக வீசுவேன். இதுதான் காட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை என்றது. இதனைக் கட்சித் தொண்டர்கள் மனதில் கொண்டு ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் ரூ. 400 கோடியில் தடுப்பணை

கொள்ளிடம் ஆற்றில் ரூ. 400 கோடியில் தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ. 400 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 110 விதியின் கீழ், சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்.
பண்ருட்டி வட்டம், விசுவநாதபுரம் பெண்ணாற்றில் தடுப்பணை கட்டப்படும். விருத்தாசலம் அருகே பூதாம்பூரில் மணிமுக்தா நதியில் தரைமட்ட தடுப்பணையும், திட்டக்குடி வெள்ளாற்றில் தடுப்பணையும் கட்டப்படும். பிச்சாவரம் உப்பனாற்றில் கடல்நீர் உள்புகாமல் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவரும், வல்லம்படுகை, கொள்ளிடம் ஆதிவராகநல்லூர் வெள்ளாற்றின் குறுக்கே கடல் நீர் உள்புகுவதைத் தடுக்க தடுப்புச் சுவரும் கட்டப்படும். இதற்கான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் 54 கிராமங்கள் பயன்பெறும்.
காட்டுமன்னார்கோவிலில் தற்போது தொடங்கப்பட்ட கலை - அறிவியல் கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும். வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் ரூ. 140 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தால் திட்டக்குடி, பெண்ணாடம், மங்களூர், வடலூர், குறிஞ்சிப்பாடி, கெங்கைகொண்டான், விருத்தாசலம், நல்லூர், மங்களூர் ஆகிய பகுதிகள் பயன்பெறும்.
கடலூர் துறைமுகத்தை மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ், ரூ. 115 கோடியில் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணி நிறைவு பெற்றால் இந்தப் பகுதியில் சமூக, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதேபோல, மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் 9 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து, 812 கிராமங்கள், 2 பேரூராட்சிகள், கடலூர் நகராட்சியைச் சேர்ந்த 7.72 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 260 கோடியில் நிறைவு பெற்ற கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com