விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு பாதித்த மேலும் ஒருவர் சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதனால், டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதனால், டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், காணை அருகேயுள்ள கல்பட்டு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் சின்னப்ப ராபர்ட் (34). விழுப்புரம் தனியார் நிதி நிறுவன விற்பனை மேலாளராக உள்ளார். இவருக்கு அண்மையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தீவிர சிகிச்சைக்காக, மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சின்னப்ப ராபர்ட், புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். உயிரிழந்த சின்னப்ப ராபர்ட்டுக்கு மேரி என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
கடந்த வாரம், மரக்காணம் அருகேயுள்ள மந்தவாய் பகுதியைச் சேர்ந்த சிற்பத் தொழிலாளி சுரேஷ் (25) டெங்கு காய்ச்சல் பாதிப்பில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், டெங்கு காய்ச்சலுக்கான போதிய தடுப்பு மருந்துகள் இல்லாததால், தீவிர சிகிச்சைக்காக புதுவை பகுதி மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
சுகாதாரத் துறை மறுப்பு: இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை. சின்னப்ப ராபர்ட் உயிரிழப்பு டெங்கு காய்ச்சலால் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 40 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை மூலம் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது, டெங்கு காய்ச்சல் பாதிப்பில் உள்நோயாளிகள் யாரும் இல்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை. எனினும், டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய மருந்துகளும் போதியளவு இருப்பில் உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com