விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம்: கே. பாலகிருஷ்ணன்

விவசாயிகளின் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்

விவசாயிகளின் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
நாகை அவுரித்திடலில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 2016-17 -ஆம் ஆண்டுக்குரிய பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வறட்சியால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய இடுபொருள்களுக்கும், வேளாண் கருவிகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கே. பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்து பேசியது:
அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்றாக்குவதிலும், 2019 -இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வரும் நடவடிக்கைகளிலுமே மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்திய நாட்டில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மீண்டும் தேர்தலை எதிர்பார்த்தே உள்ளனர்.
விவசாய பிரச்னைகள், வறட்சி, காவிரி ஆணையம் அமைத்தல் உள்ளிட்டவைகள் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. வறட்சி நிவாரணமாக ரூ. 39 ஆயிரம் கோடியை தமிழக அரசு கோரியது. ஆனால் ரூ.1,700 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. நீட் தேர்வு உள்பட அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான பிரச்னைகள் இன்றைக்கு அதிகமாகியுள்ளன. எனவே, நாடு முழுவதும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் 21 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து விவசாய சங்கங்கள், தொழிலாளர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
ஆட்சி மாற்றம் என்பது தேர்தலால் மட்டுமே வராது. விவசாயிகளின் பிரச்னையை தீர்க்காவிட்டால், அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு, ஆட்சி மாற்றத்தை உருவாக்குவர் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் என். கெளதமன், நிவேதா எஸ். முருகன், இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி. முருகையன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் வி. சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலர் காவிரி தனபாலன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள் ஏ. நெப்போலியன், தா. குணசேகரன், மாவட்டச் செயலர்கள் பூபேஸ் குப்தா, கி. தளபதிராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com