3 மணி நேரம் மட்டுமே செயல்படும் அரசுப் பள்ளி: மலை கிராம மாணவர்கள் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்துள்ள தாழைக்கிடை அரசு துவக்கப் பள்ளி தினமும் 3 மணி நேரம் மட்டுமே செயல்படுவதால், அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின்
3 மணி நேரம் மட்டுமே செயல்படும் அரசுப் பள்ளி: மலை கிராம மாணவர்கள் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்துள்ள தாழைக்கிடை அரசு துவக்கப் பள்ளி தினமும் 3 மணி நேரம் மட்டுமே செயல்படுவதால், அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலையில் புதூர்,  பழையூர், தென்மலை, கடமான்குளம், வேளாண் பண்ணை, தாழைக்கிடை என 8-க்கும்  மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில்,  தாழைக்கிடை மற்றும் சுற்றுப்புற பகுதியில் மட்டும் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தாழைக்கிடை பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படிப்பதற்காக கடந்த 1977ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தொடங்கப்பட்டது. அப்போதைய திண்டுக்கல் சார் ஆட்சியர் சாந்தஷீலா நாயர் அந்த பள்ளியை திறந்து வைத்துள்ளார்.

சுமார் 40 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த அப்பள்ளியில் தற்போது பயிலும் 15 மாணவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர் உள்பட 2 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். தாழைக்கிடை கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லை.  சரக்கு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர். இதனை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, தாழைக்கிடை பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும், ஒரு வார இடைவெளியில் ஒரு ஆசிரியர் மாற்றி மற்றொரு ஆசிரியர் வருவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.

அப்பகுதியில் உள்ள ஒருவர், மோட்டார் சைக்கிள் மூலம் காலை 10.30 மணிக்கு ஆசிரியரை அழைத்து வருவதாகவும்,  மதிய உணவு முடிந்தவுடன் மீண்டும் அந்த ஆசிரியரை சிறுமலை பழையூருக்கு அழைத்துச் சென்று விட்டு விடுவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை இப்பள்ளிக்கூடம் சிறப்பாக  செயல்பட்டு வந்தது.  அப்போது,  தாழைக்கிடையிலிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள வேளாண் பண்ணையிளும், 3 கி.மீட்டர் தூரத்தில் உள்ள தவிட்டுக்கடை பகுதியிலும் துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், தாழைக்கிடையில் தங்கியிருந்து கல்வி கற்பித்தனர்.

இன்றைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு, இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் ஜீப் போன்றவை சென்று வருகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்சிறுமலை பழையூரிலிருந்து 7 கி.மீட்டர் நடந்து வர வேண்டிய நிலை இருந்தது. ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வராததாலும், கற்பித்தல் குறைபாடு இருப்பதாலும்,  பல குழந்தைகள் வேம்பார்பட்டி, சாணார்பட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

தாழைக்கிடை பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 70 குழந்தைகள் படித்து வந்த நிலையில் தற்போது 15 பேர் மட்டுமே உள்ளனர். பேருந்து வசதி இல்லாத மலைகிராம பள்ளி என தெரிந்திருந்தும், 2 பெண் ஆசிரியர்களை நியமித்துள்ளனர். மாணவர் சேர்க்கை குறைந்ததால் தவிட்டுக்கடை மற்றும் வேளாண் பண்ணையில் செயல்பட்டு வந்த பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.  ஆசிரியர்களின் செயல்பாடு காரணமாக, அந்த வரிசையில் தாழைக்கிடை பள்ளியும் விரைவில் இடம் பெறும். அப்போது ஏழை குழந்தைகளுக்கு, கல்வி பெறும் உரிமை பறிபோகும் நிலை உருவாகும் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்  த.சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தப்படும். அதேபோல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலை கிராம மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட அந்த பள்ளியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com