அதிமுகவில் உச்சகட்ட மோதல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை, போயஸ் தோட்டம் நினைவில்லமாக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளால் அதிமுக அம்மா அணியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் உச்சகட்ட மோதல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை, போயஸ் தோட்டம் நினைவில்லமாக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளால் அதிமுக அம்மா அணியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக அவர் பெங்களூருவில் சசிகலாவுடன் ஆலோசனைகளை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பார் எனத் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும், அவர் வாழ்ந்த இல்லம் நினைவிடமாக்கப்படும் ஆகிய முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டார் .
இந்த அறிவிப்புகளுக்கு டிடிவி தினகரன் அணியினர் வெளிப்படையாக வரவேற்புத் தெரிவித்தாலும், அது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று அவருடன் இணைவதற்காக செய்யப்பட்டதாகவே பார்க்கிறார்கள்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்றே இதைச் செய்துள்ளதாகவும் அவர் கருத்துத் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிமுக அணிகள் இணையவே, இணையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்தடுத்த அதிரடிகள்: அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தை மோசடி எனக் கூறிய டிடிவி தினகரன், மேலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தைக் கூட்டி தனது பலத்தைக் காட்டினார். மேலும், ஆட்சியாளர்கள் சரியான முறையில் ஆட்சி நடத்த வேண்டுமெனவும் எச்சரித்தார்.
இதற்கு, கடலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 'யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்' என்றார். இந்தக் கருத்துடன் அவர் அதிரடியான அறிவிப்பையும் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை, அவரது இல்லம் நினைவில்லமாக்கல் ஆகிய அறிவிப்புகளால் அதிமுக அம்மா அணியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை ஓ.பன்னீர்செல்வத்தின் அணியினர் முன்வைத்து வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பழனிசாமி அணியினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இதற்கு டிடிவி தினகரன் அணியினர் எத்தகைய பதிலடிகளைத் தரப் போகின்றனர் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், வெள்ளிக்கிழமையன்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முக்கிய ஆலோசனை நடத்தி எடப்பாடி கே.பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றவுள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம் அணி இணைவது என்பதை தினகரன் அணியினர் ஏற்றுக் கொள்வதாகஇல்லை. இப்படி இணைப்பு ஏற்படுமானால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகக் தெரிகிறது. தங்கள் அணிக்கு வலு சேர்க்கும்விதத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத்திரட்டும் முயற்சியில் தினகரன் அணியும் அதை எதிர்கொள்வதற்கு பழனிசாமி அணியும் களம் இறங்கி இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com