ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அறிவிப்பு: ஓபிஎஸ் அணியில் கருத்து வேறுபாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக,
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அறிவிப்பு: ஓபிஎஸ் அணியில் கருத்து வேறுபாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா (ஓபிஎஸ்) அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
எதிர்ப்பு: இந்த அறிவிப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியது:
போயஸ் தோட்டம் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதை வரவேற்கிறோம். ஆனால், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணையைத்தான் நாங்கள் கேட்டோம். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதை நாங்கள் ஏற்கமாட்டோம். சிபிஐ விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளி வரும்.
சசிகலாவின் குடும்பத்தைக் கட்சியிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் கொடுத்துள்ள பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெற வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றாதவரை அணிகளின் இணைப்புக் குறித்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றார் அவர்.
வரவேற்பு: அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் அணியின் மற்றொரு முன்னாள் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
போயஸ் தோட்டம் இல்லம் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டிருப்பதையும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதையும் முழுமனதுடன் வரவேற்கிறோம். இது, எங்கள் தர்மயுத்தத்துக்குக் கிடைத்த வெற்றி. எங்களுடைய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக இணைப்பு குறித்து வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளது. இரு அணிகளும் இணைந்தால் அதிமுக பலப்படும் என்றார் அவர்.
முதல்வரின் அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள பெரும்பாலோர் ஏற்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். கே.பி.முனுசாமி உள்பட சிலர் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களை மட்டும் விடுத்து, மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com