தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஎஸ்இ மாணவர்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் ஆஜராகி, 'உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. நீட் தேர்விலிருந்து அவசரச் சட்டத்தின் மூலம் தமிழகம் மீண்டும் விலக்கு கேட்பதை அனுமதிக்க முடியாது' என்றனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான விகாஸ் சிங், 'நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பிற மாநிலங்களில் இரண்டாவது கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால், தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான தரவரிசைப் பட்டியலைக்கூட வெளியிடவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கையையும் தொடங்கவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக அவசரச் சட்டத்தை எதிர்நோக்கி, மருத்துவ மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு இணங்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும்' என்றார்.
மாணவர்களின் மற்றொரு தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.யு. சிங், 'தமிழகத்தில் நீட் தேர்வை சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். அதில் மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், நீட் தேர்வில் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டால் பிற மாநிலங்களும் விலக்கு கேட்கும் நிலை உருவாகும்' என்றார்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, 'தமிழகத்தில் மாநில பாடத் திட்டமும், சிபிஎஸ்இ பாடத் திட்டமும் மாறுப்பட்டவையாக உள்ளன. இதனால், மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களால் போட்டியிட முடியவில்லை' என்றார்.
அப்போது குறுகிட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்பே விழிப்பாக இருக்கவில்லை. கடைசி நேரத்தில் ஏன் விழித்தது? நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நிலை என்னவாகும்? நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்த விவகாரத்தில் இரு பிரிவினைரையும் எப்படி திருப்திப்படுத்த முடியும்? எனக் கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, 'ஒவ்வொரு சட்டத் திருத்தமும், ஒரு சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக மாநில அரசு சட்டம் இயற்றக் கூடாதா என்ன? என்றார்.
இதற்கு நீதிபதிகள், 'தமிழக அரசு காலம் கடத்திவிட்டது. இதை முன்னரே செய்திருக்க வேண்டும் என்றனர். இதற்கு சேகர் நாப்டே, 'நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் சாதகமான பதிலை அளித்துள்ளார்' என்றார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,'நீட் விலக்கு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவரசச் சட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நிறைவேற வாய்ப்புள்ளது' என்றார்.
அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'நீட் தேர்வு முறையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம்.
இந்த விவகாரத்தில் நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயல்பாடும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம், நீட் தேர்வு முடிவு, கிராமப்புற மாணவர்களின் பின்னணி குறித்த தகவல்கள் ஆகியவற்றை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரையிலும் தற்போதுள்ள நிலையே தொடரும்' என தெரிவித்து வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஆகஸ்ட் 22) ஒத்திவைத்தனர். இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் இடைக்காலத் தடை தொடருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com