போலீஸ் பாதுகாப்புடன் கொடைக்கானலில் இரோம் சர்மிளா திருமணம்

கொடைக்கானலில் வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் மணிப்பூர் மாநில பெண் போராளி இரோம் சர்மிளா திருமணம் நடைபெற்றது.
கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்ட இரோம் சர்மிளா-ஆண்டனி தேம்ஸ்வந்த் கொட்டின்கோ.
கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்ட இரோம் சர்மிளா-ஆண்டனி தேம்ஸ்வந்த் கொட்டின்கோ.

கொடைக்கானலில் வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் மணிப்பூர் மாநில பெண் போராளி இரோம் சர்மிளா திருமணம் நடைபெற்றது.
இங்குள்ள பேத்துப்பாறை பகுதியில் தங்கியுள்ள இவர், தனது காதலரான ஆண்டனி தேம்ஸ்வந்த் கொட்டின்கோவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். இவர்களது திருமணத்துக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள மலைவாழ் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே, புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த இத்திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரோம் சர்மிளா சானு- ஆண்டனி தேம்ஸ்வந்த் கொட்டின்கோ திருமணம் கொடைக்கானல் சார் பதிவாளர் மு.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இருவரும் மாலை மாற்றிக் கொண்டதுடன், மோதிரமும் மாற்றிக் கொண்டனர். இத்திருமணத்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலையிலுள்ள தங்கள் வீட்டிலிருந்து சுமார் 3 கி.மீ தூரம் நடந்தே கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு இருவரும் வந்தனர்.
இதுகுறித்து இரோம் சர்மிளா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது திருமணத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தது கவலையாக உள்ளது. என்னை மணிப்பூர் வாசியாக பார்க்க வேண்டாம். பல போராட்டங்களுக்கு பிறகு நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திருமணத்துக்குப் பிறகு கொடைக்கானலிலேயே தங்கியிருந்து தென்னிந்திய மக்களின் உரிமைக்காகவும், மலைவாழ் மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது கொடுமையானது.
'கக்கூஸ்' ஆவணப் பட இயக்குநர் திவ்யபாரதிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பேன். அடுத்த மாதம் 12-ஆம் தேதி புவனேஷ்வர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கும் மக்கள் பிரச்னைக் குறித்த மாநாட்டில் நானும் பங்கேற்க உள்ளேன் என்றார்.
இது குறித்து திவ்யபாரதி கூறியதாவது:
இரோம் சர்மிளா திருமணத்தில் பங்கேற்றது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது துரதிருஷ்டவசமானது. தமிழ்நாட்டில் இத்திருமணம் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மணிப்பூரில் இருந்தது போன்று தமிழகத்தில் அவ்வளவு மோசம் இல்லை. கக்கூஸ் படத்தை பார்த்து ஜாதி ஒழிப்பு குறித்து பேசுவதும், அம்பேத்கர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதும் நல்ல விஷயமாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இரோம் சர்மிளா இப்படி ஒரு குரல் கொடுப்பது ஜாதிய அமைப்புகளுக்கு எதிராக தொடுக்கிற மிகப்பெரிய தாக்குதலாக உள்ளது என நினைக்கிறேன் என்றார்.
ஆண்டனி தேம்ஸ்வந்த் கொட்டின்கோ கூறும் போது, இரோம்சர்மிளா கலந்து கொள்ளும் போராட்டங்களில் நானும் கலந்து கொள்வேன் என்றார்.
இத்திருமணத்தில் பங்கேற்பதற்காக மதுரை, தாராபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இரோம் சர்மிளாவின் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com