இரு தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் முன்மொழிவு: தில்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

'நீட்' தேர்வு விலக்கு கோரும் விவகாரத்தில், மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற கிராமப்புற மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதி தேர்வான மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மருத்துவ மாணவர்
இரு தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் முன்மொழிவு: தில்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

'நீட்' தேர்வு விலக்கு கோரும் விவகாரத்தில், மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற கிராமப்புற மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதி தேர்வான மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்வதற்கான முன்மொழிவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் எஸ்.கிருஷ்ணன், உமாநாத், செந்தில்ராஜ், ராதாகிருஷ்ணன் உள்பட ஐந்து பேர் கொண்ட உயரதிகாரிகள் குழு, தில்லியில் முகாமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக சுகாதாரத் துறை உயரதிகாரி உள்ளிட்டோர் நேரில் சென்று முக்கியத் தகவல்களை அளித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
'நீட்' தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் வரவேற்கத்தக்கது. 'நீட்' தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், உடனே கவுன்சிலிங்கை நடத்துமாறு உத்தரவிடவில்லை. இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாகும்.
அதேபோல, எந்த மாணவரும் பாதிக்காத வகையில் மத்திய அரசு, மாநில அரசு, சுகாதாரத் துறை, இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை இணைந்து ஒரு முன்மொழிவை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள், கிராமப்புற மாணவர்கள் ஆகியோரின் நலனைக் கருதியே நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களும் தமிழக மாணவர்கள்தான். அவர்கள் நலன்கள் கருத்தில் கொள்ளப்படும். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தமிழக முதல்வர்ஆலோசனை நடத்துவார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி எந்த மாணவரும் பாதிக்காத வகையில் நல்ல முன்மொழிவை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) உச்ச நீதிமன்றத்தில் வழங்குவோம். இரு தரப்பினருக்கும் சமநிலை வாய்ப்பு வழங்குவதற்கான நல்ல முடிவை தமிழக அரசு முன்வைக்கும்.
அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை ஓரிரு நாள்களில் ஒப்புதல் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே விலக்கு கோரியுள்ளோம். தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக 15 சதவீதம் வழங்கப்படுகிறது. ' நீட்' அடிப்படையில்தான் அந்த இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன்படி சுமார் 456 இடங்கள் நீட் தேர்வு எழுதியோருக்கு கிடைக்க வாய்ப்புண்டு.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நீட் தேர்வில் அடிப்படையில்தான் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ஓராண்டுக்கு விலக்கு அளிக்குமாறு கோரியுள்ளோம். அதற்கு மத்திய அரசும் உதவி வருகிறது. எல்லா மாணவர்களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்கும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக மாணவர்களின் நிலை குறித்து எடுத்துக் கூறப்படும் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com