ஓரிரு தினங்களில் இரு அணிகள் இணையும்: ஓபிஎஸ் பேட்டி

இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என
ஓரிரு தினங்களில் இரு அணிகள் இணையும்: ஓபிஎஸ் பேட்டி

சென்னை:  இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுகவில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக கோரினார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவரது அணியினர் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச்சில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஓ.பி.எஸ். அணியினர் ஒருபுறம் நீதி விசாரணை கோர, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரு அணிகளும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் விடுத்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசு நினைவில்லமாக மாற்றப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என வியாழக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

இந்த விசாரணை ஆணைய அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணியின் ஒரு பிரிவினரும், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்தவர்களும் வரவேற்புத் தெரிவித்தனர்.

முன்னதாக அதிமுக இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் இருந்து விலக்கி வைப்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பது ஆகிய ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியக் கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே அதிமுகவின் இரு அணிகளும் பரபரப்பாகக் காணப்பட்டன.

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கிய ஆலோசனை சுமார் 5 மணி நேரம் வரை நடைபெற்றது. ஓ.பி.எஸ்., தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாத காரணத்தால் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலரும் இரவு 9 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். இந்த தொடர் ஆலோசனைகளால் அதிமுக அம்மா அணியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அதிமுக இணைப்புக் குறித்து உறுதியான முடிவெடுக்க முடியாமல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குழப்ப நிலையில் இருந்து வருகிறார். அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். அப்படி அமைத்தால்தான் இணைப்பு பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பமான நிலையில் இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பினர். கூட்டம் முடிந்து மதுசூதனன் செல்லும்போது, ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார்.

இரு அணிகள் இணைப்புத் தொடர்பாக தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஆலோசனைக்குப் பிறகு இணைப்பு தொடர்பாக இன்று சனிக்கிழமை (ஆக.19) முடிவு தெரிவிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தனது அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்திய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

அப்போது: அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கி கொடுத்த கட்சியைக் காப்பாற்றும் நோக்கிலும், அவர்கள் வகுத்து கொடுத்த அரசியல் பாதையை தொடர்ந்து வெற்றிகரமாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

அணிகள் இணைப்பில் அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களின் விருப்பம்படியே அணிகள் இணைப்பு நடக்கும். கூடிய விரைவில், இன்னும் ஒரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும். நீங்கள் பொறுமையாக இருந்து நல்ல முடிவை எதிர்பாருங்கள் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த பேட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தினார் ஓபிஎஸ்.

முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன், அவைத் தலைவர் மதுசூதனன், சி.பொன்னையன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com