தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நாற்று நடும் போராட்டம்

தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நாற்று நடும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
தில்லியில் வெள்ளிக்கிழமை வயல் அமைத்து நாற்று நட்ட அய்யாக் கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்.
தில்லியில் வெள்ளிக்கிழமை வயல் அமைத்து நாற்று நட்ட அய்யாக் கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்.

தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நாற்று நடும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர். தமிழகத்தில் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறையைத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி, நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 34-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதி சாலையில் மணலைக் கொட்டி நீர் தெளித்து உழுதனர். பின்னர், விதை விதைத்து நாற்று நட்டனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகளைப் பெருமைப்படுத்தும் திரைப்படப் பாடல்களையும் பாடினர்.
இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தரில் போராட்டம் மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், 'தமிழகத்திற்கு தண்ணீர் தந்துவிட்டால் மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டிக் கொள்வதை தமிழகம் எதிர்க்காது' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் கூறியதாகத் தெரிய வருகிறது. இது வருந்தத்தக்கது.
மேக்கேதாட்டுப் பகுதியில் கர்நாடக அரசு அணையைக் கட்டுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக் கூடாது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்காமல் இருந்து வருகிறது. நதிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக் கூறும் வகையிலும், தமிழகத்திற்குத்தான் தண்ணீர் வழங்கவில்லை; தில்லியிலாவது எங்களுக்கு தண்ணீர் வழங்குங்கள் என்று கூறும் வகையிலும் இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். விவசாயிகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். நவம்பர் 20-ஆம் தேதி தில்லி ராம் லீலா மைதானத்தில் பல்வேறு மாநில விவசாயிகளை ஒருங்கிணைத்து பெரும் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com