பேரவைத் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடுத்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடுத்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2011 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சைதை துரைசாமியும், திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். இதில், மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 549 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி எம்.வேணுகோபால் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வழங்கினார். இந்த வழக்கில் மு.க. ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. குறிப்பாக, வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு நேரடி சாட்சி இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சைதை துரைசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெயந்த் முத்ராஜ், 'இரு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்தும் இந்த வழக்கில் தீர்வு காணப்படவில்லை' என்றார்.
இதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கும்படி உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com