போலி ஹோமியோபதி மருத்துவப் பதிவு சான்றிதழ்: முன்னாள் பதிவாளர் உள்பட 15 பேர் மீது வழக்கு

சென்னையில் போலி ஹோமியோபதி மருத்துவப் பதிவு சான்றிதழ் வழங்கியதாக ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் முன்னாள் பதிவாளர் உள்பட 15 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

சென்னையில் போலி ஹோமியோபதி மருத்துவப் பதிவு சான்றிதழ் வழங்கியதாக ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் முன்னாள் பதிவாளர் உள்பட 15 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அரும்பாக்கத்தில் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் செயல்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், இந்த மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த பின்னரே, அவர்கள் மருத்துவம் பார்க்க முடியும். இந்நிலையில், இந்த மருத்துவ கவுன்சிலில் சிலர் போலிச் சான்றிதழ் பெற்று மக்களுக்கு மருத்துவம் செய்வதாக, ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதுகுறித்து அந்த மருத்துவக் கவுன்சிலின் பதிவாளர் ராஜசேகரன், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள்: மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தவர்களிடம் போலீஸார் விசாரணை செய்தனர். அதில் சிலர் ஹோமியோபதி படிக்காதவர்கள் எனவும், ஏற்கெனவே ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்போரின் சான்றிதழை பெற்று, அதில் அவர்களது பெயரை நீக்கிவிட்டு, தங்களது பெயரை எழுதியிருப்பதும் தெரியவந்தது.
40 போலிச் சான்றிதழ்கள் பறிமுதல்: மேலும், உயிரிழந்த ஹோமியோபதி மருத்துவர்களின் சான்றிதழ்களையும் இந்த மோசடிக் கும்பல் பயன்படுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த மோசடி கடந்த 2010 -ஆம் ஆண்டில் இருந்து 2012 -ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றிருப்பதும் போலீஸாருக்கு தெரிய வந்தது.
இவர்களுக்கு, ஹோôமியோபதி மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்திருப்பதும், இந்த மோசடியில் லட்சக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் 40 போலிச் சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையின் முடிவில், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் முன்னாள் பதிவாளர் சௌந்தரராஜன், முன்னாள் தலைவராக இருந்த டாக்டர் ஜி.பி.ஹனிமன், முன்னாள் உறுப்பினர்கள் ரங்கசாமி, பரமேஸ்வரன் நம்பியார், என்.ரவிக்குமார், கிரிவாசன், பாலகிருஷ்ணன் உள்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com